வேறு மொழிகள் | தமிழ்ப் பகுதி | ஆங்கிலப் பகுதி

கூலியுழைப்பும் மூலதனமும்
(கார்ல் மார்க்ஸ்)
தமிழாக்கம்: மு.சிவலிங்கம்

பொருளடக்கம் | முந்தைய பகுதி | அடுத்த பகுதி

முகப்புரை


வர்க்கங்களுக்கு இடையேயும், தேசங்களுக்கு இடையேயும் தற்போது நடைபெறும் போராட்டங்களுக்குப் பொருளாயத அடிப்படையாக விளங்கும் பொருளாதார உறவுகளை நாம் தக்கபடி எடுத்து விளக்கத் தவறிவிட்டோம் என்பதாகப் பல்வேறு தரப்பிலிருந்தும் நம்மைப் பற்றிக் குறை கூறியுள்ளனர். குறிப்பிட்ட காரணத்தோடுதான், இதுவரையில் நாம் இந்த உறவுகளை, அவை அரசியல் மோதல்களில் வலிய தம்மை வெளிப்படுத்திக் கொண்டபோது மட்டும், சுருக்கமாகத் தொட்டுக் காட்டியுள்ளோம்.

நாம் வாழும் காலத்தின் வரலாற்றிலேயே நடந்துவரும் வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சியை உற்றுக் கவனிப்பதும், நாள்தோறும் புதிதாக உருவாக்கப்படுகின்ற, மெய்யான வரலாற்றுத் தரவுகளைக் கொண்டு கீழ்க்காணும் வரலாற்றுக் கூறுகளை அனுபவ ரீதியாக நிரூபித்துக் காட்டுவதும் வேறெவற்றையும்விட அவசியமானதாக இருந்தது: 1848 பிப்ரவரி, மார்ச்சில் தொழிலாளி வர்க்கத்துக்குத் தோல்வி ஏற்பட்ட அதே நேரத்தில், தொழிலாளி வர்க்கத்தின் எதிரிகளும் – ஃபிரான்சில் முதலாளித்துவக் குடியரசுவாதிகளும், ஐரோப்பாக் கண்டம் முழுவதிலும் நிலப்பிரபுத்துவ எதேச்சாதிகாரத்தை எதிர்த்துப் போராடிய முதலாளித்துவ, விவசாயி வர்க்கங்களும் – தோற்கடிக்கப்பட்டனர்; ஃபிரான்சில் 'மிதவாதக் குடியரசின்' வெற்றியானது, அதேவேளையில், பிப்ரவரிப் புரட்சியின் தாக்கத்தில் விடுதலைப் போர்கள் தொடங்கிய தேசங்களின் வீழ்ச்சியையும் குறித்தது; முடிவாக, புரட்சிகரத் தொழிலாளர்களை வெற்றி கொண்டதன்மூலம், ஐரோப்பா மீண்டும் அதன் பழைய இரட்டை அடிமை நிலைக்கு, ஆங்கிலோ-ருஷ்ய அடிமை நிலைக்குச் சரிந்துவிட்டது. பாரிசில் ஜூன் மோதல், வியன்னாவின் வீழ்ச்சி, 1848 நவம்பரில் பெர்லினில் நடைபெற்ற சோக-நகைச்சுவை, போலந்து, இத்தாலி, ஹங்கேரியின் பிரயத்தனங்கள், பட்டினி போடப்பட்டு அயர்லாந்து பணிய வைக்கப்பட்டமை – இவைதாம் முதலாளித்துவ வர்க்கத்துக்கும் தொழிலாளி வர்க்கத்துக்கும் இடையேயான ஐரோப்பிய வர்க்கப் போராட்டத்தின் சாராம்சமான பிரதான நிகழ்வுகளாகும். இந்த நிகழ்வுகளைக் கொண்டுதான், எந்தவொரு புரட்சிகர எழுச்சியும், அதன் குறிக்கோள் வர்க்கப் போராட்டத்துக்குத் தொடர்பின்றி எவ்வளவுதான் விலகி இருப்பதாகத் தோன்றினாலும், புரட்சிகரத் தொழிலாளி வர்க்கம் வெற்றிவாகை சூடாதவரை அவ்வெழுச்சி தோல்வியுறவே செய்யும் என்பதை நிரூபித்துக் காட்டினோம். பாட்டாளி வர்க்கப் புரட்சியும் நிலப்பிரபுத்துவ எதிர்ப்புரட்சியும் உலகளாவிய யுத்தம் ஒன்றில் பலப்பரீட்சை நடத்தாதவரை எந்தவொரு சமூகச் சீர்திருத்தமும் பகற்கனவாகவே இருக்கும் என்பதையும் மேற்கண்ட நிகழ்வுகளைக் கொண்டு நாம் நிரூபித்துக் காட்டினோம். எதார்த்தத்தில் நடந்தது போன்றே, நம் விளக்கத்திலும், பெல்ஜியமும் சுவிட்சர்லாந்தும் மாபெரும் வரலாற்றுப் படக்காட்சியில் சோக-நகைச்சுவை பாணியிலான பொய்மைத் தோற்றப் படங்களாகவே அமைந்தன. ஒன்று முதலாளித்துவ முடியரசுக்கு முன்மாதிரி அரசு. மற்றொன்று முதலாளித்துவக் குடியரசுக்கு முன்மாதிரி அரசு. இரண்டுமே தாம் ஐரோப்பியப் புரட்சியில் சிக்காமல் இருப்பதுபோன்றே வர்க்கப் போராட்டத்திலும் சிக்கிக் கொள்ளாமல் இருப்பதாகத் தமக்குத் தாமே பீற்றிக் கொள்கின்றன.

1848-ஆம் ஆண்டின் வர்க்கப் போராட்டம் பிரம்மாண்ட அரசியல் பரிமாணம் எடுத்துள்ளதைத் தற்போது நம் வாசகர்கள் அறிந்துள்ளதால், முதலாளித்துவ வர்க்கத்தின் இருப்புக்கும், அதன் வர்க்க ஆட்சியின் இருப்புக்கும், அத்தோடு தொழிலாளர்களின் அடிமை நிலைக்கும் அடித்தளமாக விளங்கும் பொருளாதார உறவுகளை மேலும் ஆழமாகப் பரிசீலிக்க வேண்டிய காலம் வந்துவிட்டது.

மூன்று பெரும் பிரிவுகளில் சாரப் பொருளை நாம் முன்வைக்கின்றோம்:

1) கூலியுழைப்புக்கும் மூலதனத்துக்கும் உள்ள உறவு, தொழிலாளியின் அடிமை நிலை, முதலாளியின் ஆட்சியதிகாரம்.

2) தற்போதுள்ள சமுதாய அமைப்பில் நடுத்தர [குட்டி-முதலாளித்துவ] வர்க்கங்களும், குடிமக்கள் எனப்படும் விவசாயிகளும் தவிர்க்க இயலாதபடி அழிந்துபோதல்.

3) உலகச் சந்தையின் எதேச்சதிகாரியான இங்கிலாந்து, பல்வேறு ஐரோப்பிய தேசங்களின் முதலாளித்துவ வர்க்கங்கள்மீது திணிக்கும் வணிக அடிமைத்தனமும், வணிகச் சுரண்டலும்.

மேற்கண்ட கருத்துகளை, இயன்றவரை எளிதாகவும் பலரும் படிக்கும் வண்ணமும் எடுத்துரைக்க முயல்வோம். [ஏங்கெல்ஸ் முன்னுரையில் குறிப்பிட்டவாறு, மார்க்சின் கட்டுரைத் தொடர் பாதியிலேயே நின்றுபோனது. சாரப்பொருளின் முதாலாவது பிரிவு மட்டுமே இந்த நூலில் இடம்பெற்றுள்ளது]. படிப்பவர்களுக்கு அரசியல் பொருளாதாரத்தின் அரிச்சுவடிப் பாடங்களாவது தெரிந்திருக்கும் என நாங்கள் முன் அனுமானித்துக் கொள்ளவில்லை. தொழிலாளர்கள் படித்துப் புரிந்துகொள்ள வேண்டுமென்பதே எங்கள் அவா. தவிரவும், ஜெர்மனியில் மிகமிக எளிய பொருளாதார உறவுகள் குறித்துங்கூட, மிகவும் குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு அறியாமையும் கருத்துக் குழப்பமும் நிலவுகின்றன. நிலவும் [பொருளாதார] உறவுகளின் காவலர்கள் என அங்கீகாரம் பெற்றவர்கள்முதல், சிதறுண்ட ஜெர்மனியில் துண்டு துக்காணி நிலப்பகுதிகளின் குட்டி அரசர்களைவிட மிகுதியாய்க் காணப்படும் சோஷலிசச் செப்படி வித்தைக்காரர்கள், அங்கீகாரமில்லா அரசியல் மேதாவிகள்வரை எல்லோரிடத்தும் இந்த அறியாமையும் கருத்துக் குழப்பமும் நிலவுகின்றன. எனவே, இப்போது முதலாவதாக நாம் முதல் கேள்வியை எடுத்து விளக்க முனைவோம்.


அடுத்த பகுதி: கூலி என்பது என்ன? அது எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது?

முந்தைய பகுதி: ஃபிரெடெரிக் ஏங்கெல்ஸ் 1891-ஆம் ஆண்டு எழுதிய முன்னுரை

கூலியுழைப்பும் மூலதனமும் - பொருளடக்கம்


வேறு மொழிகள் | தமிழ்ப் பகுதி | ஆங்கிலப் பகுதி