வேறு மொழிகள் | தமிழ்ப் பகுதி | ஆங்கிலப் பகுதி

கூலியுழைப்பும் மூலதனமும்
(கார்ல் மார்க்ஸ்)
தமிழாக்கம்: மு.சிவலிங்கம்

பொருளடக்கம் | முந்தைய பகுதி

முதலாளித்துவ வர்க்கம், நடுத்தர வர்க்கம், தொழிலாளி வர்க்கம் இவற்றின்மீது
முதலாளித்துவப் போட்டியின் விளைவு


இவ்வாறாக, உற்பத்தி முறையும் உற்பத்திச் சாதனங்களும் எவ்வாறெல்லாம் தொடர்ந்து மாற்றியமைக்கப்படுகின்றன, புரட்சிகரமாக்கப்படுகின்றன என்பதைக் காண்கிறோம். எவ்வாறு, உழைப்புப் பிரிவினை தவிர்க்கவியலாது அதைவிடக் கூடுதலான உழைப்புப் பிரிவினைக்கும், எந்திர சாதனங்களை ஈடுபடுத்துதல் மேலும் கூடுதலான எந்திர சாதனங்களை ஈடுபடுத்துவதற்கும், பெருவீத உற்பத்தி இன்னும் மாபெரும் அளவிலான பெருவீத உற்பத்திக்கும் வழிவகுக்கிறது என்பதைக் காண்கிறோம். இந்த விதிதான் தொடர்ந்து முதலாளித்துவ உற்பத்தியை அதன் பழைய வழிமுறைகளின் பிடியிலிருந்து பிடுங்கி எறிகிறது. உழைப்பின் உற்பத்திச் சக்திகளை மென்மேலும் தீவிரம் ஆக்குமாறு மூலதனத்தை நிர்ப்பந்திக்கிறது. காரணம், மூலதனம் அவற்றை ஏற்கெனவே தீவிரமாக்கிவிட்டது. இந்த விதிதான் மூலதனத்துக்குச் சிறிதும் ஓய்வளிக்காமல், 'முன்னே செல்! முன்னே செல்!' என்று தொடர்ந்து மூலதனத்தின் காதில் உரக்க ஓதியவாறுள்ளது. இந்த விதி, வணிகத்தின் காலமுறையான ஏற்றயிறக்கங்களுக்கு உட்பட்டு, தவிர்க்கவியலாது ஒரு பண்டத்தின் விலையை அதன் உற்பத்திச் செலவுக்கு ஏற்பச் சரிக்கட்டும் விதியே அல்லாது வேறில்லை.

ஒரு முதலாளி எவ்வளவு ஆற்றல்மிக்க உற்பத்திச் சாதனங்களை உற்பத்திக் களத்துக்குக் கொண்டு வந்தாலும் கவலையில்லை. போட்டியானது அந்த உற்பத்திச் சாதனங்களைப் பொதுவாக [உற்பத்தியாளர்கள் அனைவருமே] பயன்பாட்டில் கொண்டுவரச் செய்துவிடும். இப்படிப் பொதுவாக [அனைவருமே] பயன்பாட்டில் கொண்டுவந்த தருணம் முதலாக, இம்முதலாளியினுடைய மூலதனத்தின் கூடுதல் உற்பத்தித் திறனால் ஏற்படும் ஒரே விளைவு, அதே விலைக்கு அவர் முன்னைவிட 10, 20, 100 மடங்கு [பொருள்களை] வழங்கியாக வேண்டும். குறைவான விற்பனை விலையை அதிக எண்ணிக்கையிலான [பொருள்களின்] விற்பனையால் ஈடுகட்டும் பொருட்டு, அனேகமாக, முன்னைவிட 1000 மடங்கு அதிகம் விற்கும் சந்தையை அவர் கண்டுபிடித்தாக வேண்டும். கூடுதலான இலாபம் பெற மட்டுமன்றி, உற்பத்திச் செலவை ஈடுகட்டும் பொருட்டும் (நாம் ஏற்கெனவே பார்த்தபடி, உற்பத்திக் கருவிக்கான செலவு எப்போதும் அதிகரித்தே வருகிறது), தற்போது [முன்னைவிட] மிகப் பரந்த அளவிலான விற்பனை அவசியமாகிவிடுகிறது. இத்தகைய பரந்த அளவிலான விற்பனை, அவருக்கு மட்டுமன்றி அவருடைய போட்டியாளர்களுக்கும் வாழ்வா சாவாப் பிரச்சினையாய் ஆகிவிடுகிறது. எனவே, [முதலாளிகள்] பழைய போராட்டத்தை மீண்டும் தொடங்கியாக வேண்டியுள்ளது. ஏற்கெனவே கண்டுபிடிக்கப்பட்ட உற்பத்திச் சாதனங்கள் எந்த அளவுக்குச் சக்தி வாய்ந்தவையாக இருக்கின்றனவோ அந்த அளவுக்கு இந்தப் போராட்டம் உக்கிரம் மிகுந்ததாக இருக்கும். எனவே, உழைப்புப் பிரிவினையும் எந்திர சாதனங்களின் பயன்பாடும் மீண்டுமொரு புதிய பந்தயத்துக்குத் தயாராகும். முன்னைவிட மிகப்பெரும் அளவில் அவை நடந்தேறும்.

ஈடுபடுத்தப்படும் உற்பத்திச் சாதனங்களின் ஆற்றல் எவ்வளவுதான் இருந்தாலும், பண்டங்களின் விலையை அவற்றின் உற்பத்திச் செலவுக்குக் குறைப்பதன்மூலம் அந்த ஆற்றலால் விளையும் உன்னதப் பலன்களைப் போட்டியானது மூலதனத்திடமிருந்து பறித்துவிட முனைகிறது. உற்பத்தி எந்த அளவுக்கு மலிவாக்கப்படுகிறதோ, அதாவது, [முன்பு செலவழித்த] அதே அளவு உழைப்பைக் கொண்டு எந்த அளவுக்கு முன்னைவிடக் கூடுதலான பொருள்களை உற்பத்தி செய்ய முடிகிறதோ, அந்த அளவுக்கு உற்பத்தியை இன்னும் அதிகம் மலிவாக்குவதையும், மென்மேலும் மிகத் திரளான பொருள்களை முன்னைவிடக் குறைந்த விலைக்கு விற்பதையும், போட்டியானது தடுக்கவியலா ஒரு விதியின் மூலம் நிர்ப்பந்திக்கிறது. இவ்வாறாக, முதலாளி [முன்பு செலவான] அதே உழைப்புநேரத்தில் முன்னைவிடக் கூடுதலான பொருள்களை உற்பத்தி செய்ய வேண்டிய கடப்பாட்டைத் தவிர, சுருங்கக் கூறின், தம்முடைய மூலதனத்தை இலாபகரமாக முதலீடு செய்வதற்கு மிகவும் கடினமான நிலைமைகளை எதிர்கொள்வதைத் தவிர வேறெந்த ஆதாயத்தையும் அவர் தம் முயற்சியினால் பெற்றுவிடப் போவதில்லை. எனவே, போட்டியானது அதன் உற்பத்திச் செலவு விதியைக் காட்டி, முதலாளியைத் தொடர்ந்து விரட்டுகிறது. முதலாளி தம் போட்டியாளர்களுக்கு எதிராக உருவாக்கும் ஒவ்வோர் ஆயுதத்தையும் அவருக்கு எதிராகவே திருப்புகிறது. இதனால், முதலாளியோ ஓய்வொழிச்சலின்றி மேலும் நுண்ணிய உழைப்புப் பிரிவினையையும், புதிய எந்திரங்களையும் புகுத்தி, இந்தப் போட்டியின் உன்னதப் பலன்களை அறுவடை செய்யத் தொடர்ந்து முனைகிறார். புதிய எந்திரங்கள் அதிக விலையுடையன, முன்னைவிட மலிவாக உற்பத்தி செய்ய அவருக்கு உதவுகின்றன என்றாலும், போட்டியின் காரணமாக முதலாளி, புதிய எந்திரங்கள் காலாவதி ஆகும்வரை காத்திருக்காமல் தொடர்ந்து அவற்றை மேம்படுத்துகிறார்.

இந்தச் சுரவேகக் கிளர்ச்சி அனைத்துலகின் சந்தையிலும் ஒருங்கே நிகழ்வதை இப்போது நாம் மனத்துள் கொள்வோமெனில், மூலதனத்தின் வளர்ச்சியும், திரட்சியும், ஒன்றுகுவிப்பும், எவ்வாறு மென்மேலும் நுண்ணிய உழைப்புப் பிரிவினையையும், பழைய எந்திரங்களை மென்மேலும் கூடுதலாக மேம்படுத்துவதையும், புதிய எந்திரங்களைத் தொடர்ந்து புகுத்துவதையும் கூடவே கொண்டு வருகின்றன என்பதைப் புரிந்து கொள்ளலாம். இந்த நடைமுறை எவ்விதக் குறுக்கீடுமின்றி சுர வேகத்தில் மென்மேலும் மிகப் பிரம்மாண்டமான அளவில் நடந்தேறுகிறது.

ஆனால், உற்பத்தித் திறனுள்ள மூலதனத்தின் வளர்ச்சியிலிருந்து பிரிக்க முடியாத இந்த நிலைமைகள் கூலி நிர்ணயம்மீது எத்தகைய பாதிப்பை ஏற்படுத்துகின்றன?

அதிக அளவிலான உழைப்புப் பிரிவினை, ஒரு தொழிலாளி 5, 10, அல்லது 20 பேருடைய வேலையைச் செய்து முடிக்க வழிவகுக்கிறது. எனவே, இது தொழிலாளர்களுக்கு இடையேயான போட்டியை ஐந்து மடங்கு, பத்து மடங்கு அல்லது இருபது மடங்கு அதிகமாக்குகிறது. தொழிலாளர்கள் போட்டியிடுவது, ஒருவரைவிட மற்றவர் தன்னை மலிவான விலைக்கு விற்பதன்மூலம் மட்டுமல்ல, ஒருவரே 5, 10 அல்லது 20 பேருடைய வேலையைச் செய்வதன் மூலமும் போட்டியிட்டுக் கொள்கின்றனர். மூலதனத்தால் புகுத்தப்பட்டு, தொடர்ந்து சீராக மேம்படுத்தப்படும் உழைப்புப் பிரிவினை, தொழிலாளர்கள் இம்முறையில் போட்டியிட்டுக்கொள்ள அவர்களை நிர்ப்பந்திக்கிறது.

தவிரவும், உழைப்புப் பிரிவினை அதிகரிக்கும் அதே அளவுக்கு உழைப்பு எளிதாகிறது. தொழிலாளியின் தனிச்சிறப்பான செயல்திறன் மதிப்பிழந்து போகிறது. தொழிலாளி உடல்ரீதியாகவோ, மனரீதியாகவோ நெகிழ்திறம் (elasticity) அற்ற, சாதாரண, [ஒரேமாதிரியான] சலிப்பூட்டும் வேலையைச் செய்யும் உற்பத்திச் சக்தியாக மாற்றப்பட்டவர் ஆகிவிடுகிறார். அவருடைய வேலை எவரும் செய்யக்கூடிய ஒன்றாய் ஆகிவிடுகிறது. எனவே, போட்டியாளர்கள் அவரை அனைத்துப் பக்கங்களிலும் நெருக்குகின்றனர். அதோடுகூட, எந்த அளவுக்கு வேலை சாதாரணமாகவும், எளிதாகக் கற்றுக் கொள்ளும்படியும் இருக்கிறதோ, அந்த அளவுக்கு அதனை உற்பத்திக்குப் பயன்படுத்தும் செலவும், அதனைக் கற்றுத் தேர்வதற்கான செலவும் குறைவாக இருக்கும். அந்த அளவுக்குக் கீழே கூலியும் வீழ்ச்சியடையும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஏனெனில், வேறெந்தப் பண்டத்தின் விலையையும் போலவே கூலியும் உற்பத்திச் செலவால் நிர்ணயிக்கப்படுகிறது. எனவே, உழைப்பு மேலும் திருப்தியற்றதாகவும், வெறுப்பூட்டுவதாகவும் ஆகிவரும் அதே அளவுக்குப் போட்டி அதிகரிக்கிறது, கூலி குறைகிறது.

அதிக மணிநேரம் வேலை செய்தோ அல்லது குறிப்பிட்ட மணிநேரத்தில் அதிகமாக உற்பத்தி செய்தோ, தொழிலாளி, அதிகமான உழைப்பைச் செலுத்திக் குறிப்பிட்ட கால அளவுக்கான தன்னுடைய மொத்தக் கூலியைத் தக்கவைத்துக் கொள்ள முனைகிறார். இவ்வாறு, தேவையால் உந்தப்பட்டு, அவரே உழைப்புப் பிரிவினையின் அவலமான விளைவுகளை அதிகமாக்கிக் கொள்கிறார். இதன் விளைவு: எந்த அளவுக்கு அதிகமாக அவர் வேலை செய்கிறாரோ, அந்த அளவுக்குக் குறைவாக அவர் கூலி பெறுகிறார். இதற்கான எளிய காரணம்: எந்த அளவுக்கு அதிகமாக அவர் வேலை செய்கிறாரோ அந்த அளவுக்கு அதிகமாக அவர்தம் சக தொழிலாளர்களுக்கு எதிராகப் போட்டி போடுகிறார். அந்த அளவுக்கு அதிகமாக அவர்கள் இவருக்கு எதிராகப் போட்டி போடவும், இவர் செய்ததைப் போன்றே அதே கேவலமான நிபந்தனைகளுக்கு அவர்கள் தங்களை ஒப்படைத்துக் கொள்ளவும் அவர்களை நிர்ப்பந்திக்கிறார். ஆக, முடிவாகப் பார்க்குமிடத்து, தொழிலாளி வர்க்கத்தின் உறுப்பினர் என்ற முறையில் இவர் தனக்கு எதிராகவே போட்டி போடுகிறார்.

எந்திர சாதனமும் இதே விளைவுகளை உருவாக்குகின்றது. ஆனால் மிகப்பெரிய அளவில். அது செயல்திறமற்ற தொழிலாளர்களைக் கொண்டு செயல்திறமிக்க தொழிலாளர்களையும், பெண்களைக் கொண்டு ஆண்களையும், குழந்தைகளைக் கொண்டு வயதுவந்தோரையும் வேலையிலிருந்து விரட்டியடிக்கிறது. எந்திர சாதனம் புதிதாகப் புகுத்தப்படும் இடங்களில், அது பெருந்திரளான தொழிலாளர்களை தெருவிலே தூக்கி எறிகிறது. அதோடுகூட, அது மிகவும் மேம்பட்டதாகவும் மிகுந்த உற்பத்தித் திறன் கொண்டதாகவும் ஆகும்போது, இன்னும் கொஞ்சம் தொழிலாளர்களை வேலையிலிருந்து ஒதுக்கி வைக்கிறது.

முதலாளிகள் தமக்குள்ளே நடத்தும் தொழில்துறை யுத்தத்தின் சுருக்கமான விளக்கத்தை விரைவாக நாம் வரைந்து காட்டியுள்ளோம். இந்த யுத்தம் தனித்தன்மை கொண்டது. இதன் போர்கள் தொழிலாளர்களின் படையணியைத் திரட்டுவதால் வெல்லப்படுவதில்லை. படையணியைக் கலைத்துத் தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்புவதால் வெல்லப்படுகின்றன. தானைத் தலைவர்கள் (முதலாளிகள்), தொழில்துறையின் படைவீரர்களை மேலதிக எண்ணிக்கையில் யாரால் வீட்டுக்கு அனுப்ப முடியும் என்று தமக்குள்ளே ஒருவருக்கொருவர் போட்டியிடுகின்றனர்.

எந்திர சாதனங்களால் தேவையற்றோராய் ஆக்கப்படும் தொழிலாளர்கள் தவறாமல் புதிய பணியிடங்களில் வேலைதேடிக் கொள்கிறார்கள் என்று பொருளாதார அறிஞர்கள் நம்மிடம் கூறுகின்றனர். [ஓரிடத்தில்] வேலையிலிருந்து அகற்றப்படும் அதே தொழிலாளர்கள்தான் புதிய வேலைப்பிரிவுகளில் வேலை தேடிக் கொள்கிறார்கள் என நேரடியாக வலியுறுத்திக் கூற அவர்கள் துணிவதில்லை. உண்மை நிலவரங்களோ இந்தப் பொய்க்கு எதிராக உரத்த தொனியில் கூக்குரலிடுகின்றன. சரியாகச் சொல்வதெனில், [புதிய எந்திரங்களின் வருகையால்] தொழிலாளி வர்க்கத்தின் [ஒரு பிரிவினர் வேலையிழந்தாலும்] மற்ற பிரிவினர்க்குப் புதிய வேலைவாய்ப்புகள் தேடிவரும் என்று அவர்கள் கூறுவதாகக் கொள்ளலாம். எடுத்துக்காட்டாக, தற்போதுதான் மூடப்பட்டுவிட்ட ஒரு தொழில்பிரிவில் வேலையில் சேரத் தயாராக இருந்த இளந்தலைமுறைத் தொழிலாளர்களின் ஒரு பிரிவினருக்கு அந்த வாய்ப்புகள் கிடைக்கலாம். கதியற்ற தொழிலாளர்களுக்கு உள்ளபடியே இது மிகப்பெரிய ஆறுதல்தான். மாண்புமிகு முதலாளிமார்கள் சுரண்டிக் கொழுக்கப் புத்தம்புதிய குருதிக்கும் சதைக்கும் குறைவில்லை. முதலாளிகள் – மடிவோரே மடிந்தோரைப் புதைக்கட்டும். இந்த ஆறுதல், முதலாளிகளால் அவர்களுடைய தொழிலாளர்களின் ஆறுதலுக்குக் கூறப்பட்டது என்பதைக் காட்டிலும் அதிகமாக அவர்களின் ஆறுதலுக்கே சொல்லிக் கொள்வதுதான். எந்திர சாதனங்களால் கூலித் தொழிலாளர்களின் ஒட்டுமொத்த வர்க்கமும் ஒழித்துக்கட்டப்படுமெனில், மூலதனத்துக்கு எவ்வளவு பயங்கர நிலை ஏற்படும்! கூலியுழைப்பு இல்லையேல் மூலதனம், மூலதனம் என்னும் தகுதியை இழந்துவிடுமன்றோ!

எந்திர சாதனங்களால் நேரடியாக வேலையிலிருந்து துரத்தப்பட்ட தொழிலாளர்கள் அனைவரும், அவர்களோடு சேர்த்து, அதே தொழில்பிரிவில் வேலைவாய்ப்புக்காகக் காத்துக் கொண்டிருந்த வளர்ந்துவரும் தலைமுறையினர் அனைவரும் உண்மையிலேயே ஏதேனும் ஒரு வேலையைத் தேடிக்கொள்கிறார்கள் என்றே நாம் அனுமானித்துக் கொள்வோம். இந்தப் புதிய வேலைவாய்ப்பு ஏற்கெனவே இவர்கள் இழந்த வேலையில் பெற்றுவந்த அதே உயர்வான கூலியை வழங்கும் என நாம் நம்ப முடியுமா? அவ்வாறு நிகழ்ந்தால் அது அரசியல் பொருளாதாரத்தின் விதிகளுக்கு முரணாக இருக்கும். நவீனத் தொழில்துறை எப்போதுமே மிகவும் சிக்கலான உயர்நிலை வேலைகளின் இடத்தில் மிகவும் எளிய, துணைநிலை வேலைகளைப் பதிலீடு செய்யவே முயலும் என்பதை நாம் கண்டுள்ளோம். அப்படி இருக்கையில், எந்திர சாதனங்களால் ஒரு தொழில்பிரிவிலிருந்து தூக்கியெறியப்பட்ட திரளான தொழிலாளர்கள் முன்னைவிட மிகவும் மோசமான கூலியை ஏற்றுக் கொண்டாலொழிய வேறொரு பிரிவில் எவ்வாறு புகலிடம் பெற முடியும்?

இந்த விதிக்கு ஒரு விலக்கு, எந்திர சாதனங்களையே உற்பத்தி செய்யும் தொழில் பிரிவில் வேலை செய்யும் தொழிலாளர்கள் என்பதாகச் சுட்டிக் காட்டப்படுகிறது. தொழில்துறையில் எந்திர சாதனங்களுக்கு அதிகமான தேவை ஏற்பட்டு, அவை மிகுதியாகப் பயன்பாட்டுக்கு வந்ததுமே, எந்திரங்களின் எண்ணிக்கை தவிர்க்கவியலாமல் அதிகரித்தாக வேண்டும். அதன் காரணமாக, எந்திரங்களின் உற்பத்தியும் அதிகரித்தாக வேண்டும். அதன் காரணமாக, எந்திர உற்பத்தியில் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பும் அதிகரித்தாக வேண்டும். மேலும், தொழில்துறையின் இப்பிரிவில் வேலை செய்யும் தொழிலாளர்கள் செயல்திறம் மிக்கவர்கள், கல்வியறிவு பெற்றவர்களும்கூட என்றெல்லாம் கூறப்படுகிறது.

1840-ஆம் ஆண்டு முதலாக இந்தக் கூற்று, உண்மையின் சாயல் முழுவதையும் இழந்துவிட்டது. அந்தத் தேதிக்கு முன்னருங்கூட இது பாதி உண்மையாகவே இருந்தது. ஏனெனில், பருத்தி நூல் உற்பத்தியில் உள்ள அளவுக்குச் சிறிதும் குறைவின்றி, மிகப்பரந்த அளவில், எந்திரங்களை உற்பத்தி செய்யும் தொழில்பிரிவிலேயே பல்வேறு வகைப்பட்ட எந்திரங்கள் தற்போது பயன்படுத்தப்படுகின்றன. எந்திர உற்பத்தித் தொழிற்கூடங்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள் மிகவும் புத்திசாலி எந்திரங்களின் பக்கத்தில், முட்டாள் எந்திரங்களின் பாத்திரத்தையே வகிக்கிறார்கள். அவர்களால் அதுதான் முடிகிறது.

ஆனால், எந்திரத்தினால் வேலைநீக்கம் செய்யப்படும் ஓர் ஆணின் இடத்தில், தொழிற்சாலை அனேகமாக, மூன்று குழந்தைகளையும் ஒரு பெண்ணையும் வேலைக்கு வைத்துக் கொள்ளலாம். இதற்கு முன்பு, அந்த ஆணின் கூலி இந்த மூன்று குழந்தைகளுக்கும் ஒரு பெண்ணுக்கும் போதுமானதாக இருக்க வில்லையா? தொழிலாளர் இனத்தின் பராமரிப்புக்கும், அதன் இனப்பெருக்கத்துக்கும் இந்தக் குறைந்தபட்சக் கூலி போதுமானதாக இருக்கவில்லயா? பிறகு, இந்த அன்புக்குரிய முதலாளித்துவச் சொல்தொடர்கள் நிரூபிப்பதுதான் என்ன? உழைக்கின்ற ஒரு குடும்பம் வயிற்றுப் பிழைப்பை நடத்தும் பொருட்டு, முன்பு இருந்ததைக் காட்டிலும் தற்போது நான்கு மடங்கு தொழிலாளர்களின் வாழ்க்கை முழுதும் பலியிடப்படுகிறது என்பதற்கு மேலாக எதையும் நிரூபித்துவிடவில்லை.

தொகுத்துக் கூறுவோம்: உற்பத்தித் திறனுள்ள மூலதனம் எந்த அளவுக்கு அதிகமாக வளர்கிறதோ, அந்த அளவுக்கு அது உழைப்புப் பிரிவினையையும் எந்திர சாதனங்களின் பயன்பாட்டையும் அதிகம் விரிவடையச் செய்கிறது. உழைப்புப் பிரிவினையும் எந்திர சாதனங்களின் பயன்பாடும் எந்த அளவுக்கு அதிகமாக விரிவடைகின்றனவோ, அந்த அளவுக்கு அதிகமாகத் தொழிலாளர்களிடையே போட்டி அதிகரிக்கிறது, அந்த அளவுக்கு அவர்களின் கூலி சுருங்குகிறது.

அதோடுகூட, சமுதாயத்தின் மேலடுக்குளிலிருந்தும் தொழிலாளி வர்க்கத்துக்கு ஆட்கள் வந்து சேருகின்றனர். சிறு வணிகர்களும், தங்களின் மூலதனத்துக்குக் கிடைக்கும் வட்டியைக் கொண்டு வாழ்ந்து வருவோரும் அடங்கிய திரளான பகுதியினர் தொழிலாளி வர்க்க அணியில் திடீரெனத் தள்ளப்படுகின்றனர். வேலை கேட்டு நீளும் தொழிலாளர்களின் கைகளோடு சேர்ந்து தங்களின் கைகளையும் நீட்டுவதைத் தவிர இவர்கள் வேறு எதுவும் செய்வதற்கில்லை. இவ்வாறு, வேலை [தாவென] யாசகம் கேட்டு விரிந்து நீளும் கைகள் காடாக வளர்ந்து அக்காடு மென்மேலும் அடர்த்தியாகி வருகிறது. அதேவேளையில் அவ்வாறு நீளும் கைகளோ மென்மேலும் மெலிந்து செல்கின்றன.

தொழில்போட்டியில், மென்மேலும் பெரிய அளவில் உற்பத்தி செய்ய வேண்டும் என்பதே வெற்றிக்கு முதல் நிபந்தனையாக உள்ளது. அப்போட்டியில் சிறு உற்பத்தியாளர் தாக்குப் பிடித்து நிற்க முடியாது என்பது கண்கூடு. சிறு உற்பத்தியாளராக இருப்பவர் அதே நேரத்தில் பெரிய உற்பத்தியாளராகவும் இருக்க முடியாது என்பது சொல்லாமலே விளங்கும்.

மூலதனங்கள், அளவிலும் எண்ணிக்கையிலும் அதிகரிக்கும் அதே விகிதத்தில், மூலதனத்துக்கான வட்டி குறைகிறது. அதாவது, மூலதனம் வளரும்போது வட்டி குறைகிறது. எனவே, சிறு முதலாளி வட்டியை மட்டும் கொண்டு வாழ முடியாது. அதனால், அவர் சிறு உற்பத்தியாளராக மாறித் தொழில்துறையில் காலடி எடுத்து வைத்தாக வேண்டும். [சிறுமுதலாளி தொழில்போட்டியில் தாக்குப்பிடித்து நிற்க முடியாது என்பதால் வேறு வழியின்றித் தொழிலாளியாக மாறியாக வேண்டும்]. அதன்மூலம் பாட்டாளி வர்க்கத்தில் புகுவோரின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் – இவற்றுக்கெல்லாம் மேற்கொண்டு விளக்கம் தேவையில்லை.

முடிவாக, ஏற்கெனவே இருந்துவரும் பிரம்மாண்டமான உற்பத்திச் சாதனங்களை மென்மேலும் மிகுதியான அளவில் பயன்படுத்திக் கொள்ளவும், அதன்பொருட்டு கடன் செலாவணியின் அனைத்து மூல விசைகளையும் இயக்கி வைக்கும்படியும், எந்த அளவுக்கு மேலே விவரிக்கப்பட்ட இயக்கம் முதலாளிகளை நிர்ப்பந்திக்கிறதோ, [அதனால்] முதலாளிகள் எந்த அளவுக்குத் தொழில்துறைப் பூகம்பங்களை அதிகரிக்கின்றனரோ, அந்த அளவுக்கு நெருக்கடிகள் அதிகரிக்கின்றன. இந்தப் பூகம்பங்களுக்கிடையே, வணிக உலகமானது, தன் செல்வத்திலும், தன் உற்பத்திப் பொருள்களிலும், தன் உற்பத்திச் சக்திகளிலுங்கூட ஒரு பகுதியைக் கீழ் உலகின் கடவுள்களுக்குக் காவு கொடுத்துத்தான் தன்னை அழியாது காத்துக்கொள்ள முடிகிறது. நெருக்கடிகள் மிக அடிக்கடி நிகழ்கின்றன. மென்மேலும் கட்டுமீறிச் செல்கின்றன. இதற்குக் காரணம் வேறில்லை, இந்த ஒன்றே ஒன்றுதான்: எந்த அளவுக்குத் திரளான உற்பத்திப் பொருள்கள் பெருகுகின்றவோ, அதன் காரணமாக, எந்த அளவுக்கு விரிவடைந்த சந்தைகளுக்கான தேவை அதிகரிகின்றதோ, அந்த அளவுக்கு உலகச் சந்தை மென்மேலும் சுருங்குகிறது. பொருள்களை விற்பனை செய்ய மென்மேலும் குறைவான சந்தைகளே மிஞ்சுகின்றன. ஏனெனில், இதற்கு முந்தைய நெருக்கடி ஒவ்வொன்றும் இதுநாள்வரை வெற்றிகொள்ளப்படாத அல்லது சிறிதளவே பயன்படுத்தப்பட்ட சந்தைகளை உலக வர்த்தகத்தின் பிடிக்குள் கொண்டு வந்துவிட்டது. ஆனால், மூலதனம் உழைப்பை உறிஞ்சி வாழ்வதோடு மட்டும் நிற்கவில்லை. மூலதனமானது, கவுரவம் மிக்கவனாகவும் அதேநேரத்தில் காட்டுமிராண்டியாகவும் விளங்கும் ஓர் எஜமானனைப்போல, இந்த நெருக்கடிகளில் சிக்கிப் பலியாடுகளைப்போல் மந்தை மந்தையாக மடிந்துபோகும் தொழிலாளர்களாகிய தன் அடிமைகளின் சடலங்களையும், தன்னோடு சேர்த்துத் தன்னுடைய சவக்குழிக்கு இழுத்துச் செல்கிறது.

ஆக, நாம் காண்பது என்னவெனில், மூலதனம் விரைவாக வளருமெனில், தொழிலாளர்கள் இடையிலான போட்டி இன்னும் அதிவிரைவாக வளருகிறது. அதாவது, தொழிலாளி வர்க்கத்துக்கான வேலைவாய்ப்புகளும் பிழைப்பாதாரப் பொருள்களும் மூலதனத்தின் வளர்ச்சிக்கு ஏற்ற விகிதத்தில், இன்னும் மிக விரைவாகக் குறைகின்றன. இருந்தபோதிலும், மூலதனத்தின் விரைவான வளர்ச்சியே கூலியுழைப்புக்கு மிகவும் சாதகமான நிலைமை ஆகும்.

(நூல் முற்றும்)


முந்தைய பகுதி: மூலதனம், கூலியுழைப்பு இவற்றின் நலன்கள் நேரெதிரானவை -
உற்பத்தித் திறனுள்ள மூலதனத்தின் வளர்ச்சி கூலியின்மீது ஏற்படுத்தும் விளைவுகள்

கூலியுழைப்பும் மூலதனமும் - பொருளடக்கம்


வேறு மொழிகள் | தமிழ்ப் பகுதி | ஆங்கிலப் பகுதி