வேறு மொழிகள் | தமிழ்ப் பகுதி | ஆங்கிலப் பகுதி

கூலியுழைப்பும் மூலதனமும்
(கார்ல் மார்க்ஸ்)
தமிழாக்கம்: மு.சிவலிங்கம்

பொருளடக்கம் | முந்தைய பகுதி | அடுத்த பகுதி

ஒரு பண்டத்தின் விலை எதனால் நிர்ணயிக்கப்படுகிறது?


ஒரு பண்டத்தின் விலை எதனால் நிர்ணயிக்கப்படுகிறது? வாங்குவோருக்கும் விற்போருக்கும் இடையிலான போட்டியால், தேவைக்கும் வரத்துக்கும் (Demand and Supply) உள்ள உறவால், கேட்டலுக்கும் கிடைத்தலுக்கும் உள்ள உறவால் [ஒரு பண்டத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது]. ஒரு பண்டத்தின் விலையை நிர்ணயிக்கும் போட்டி மூன்று பரிமாணங்களைக் கொண்டது.

ஒரே பண்டத்தைப் பல்வேறு விற்பனையாளர்களும் விற்பனைக்கு வைக்கின்றனர். ஒரே தரமுள்ள பண்டங்களுள் மிகவும் குறைந்த விலைக்கு விற்பவர், ஏனைய விற்பனையாளர்களைக் களத்திலிருந்து விரட்டிவிட்டுத் தனக்கென மிகப் பரந்த சந்தையைப் பெறுவது நிச்சயம். எனவே, விற்பனையாளர்கள் விற்பனைக்காகவும், சந்தைக்காகவும் தமக்குள்ளே போட்டியிட்டுக் கொள்கின்றனர். அவர்களுள் ஒவ்வொருவரும் தம் பண்டத்தை விற்க, கூடுமானவரை அதிகமாக விற்க, முடியுமானால் ஏனைய விற்பனையாளர்கள் அனைவரையும் புறந்தள்ளிவிட்டுத் தாம் மட்டும் விற்க விரும்புகிறார். ஒவ்வொருவரும் பிறரைவிடக் குறைவான விலைக்கு விற்கின்றனர். இவ்வாறாக, விற்பனையாளர்களிடையே போட்டி ஏற்படுகிறது. இப்போட்டி இவர்கள் விற்பனைக்கு வைக்கும் பண்டங்களின் விலையை வலிந்து வீழ்த்துகிறது.

ஆனால், வாங்குவோரிடையேயும் போட்டி நிலவுகிறது. இப்போட்டி தன் பங்குக்கு, விற்பனைக்கு வரும் பண்டங்களின் விலை உயரக் காரணமாகிறது.

முடிவாக, வாங்குவோர்க்கும் விற்போர்க்கும் இடையே போட்டி நிலவுகிறது: வாங்குவோர் கூடுமானவரை குறைந்த விலைக்கு வாங்கவும், விற்போர் கூடுமானவரை அதிக விலைக்கு விற்கவும் விரும்புகின்றனர். வாங்குவோர்க்கும் விற்போர்க்கும் இடையேயான இப்போட்டியின் விளைவு, மேற்கூறிய இரு முகாமைச் சேர்ந்த போட்டியாளர்களுக்கு இடையே நிலவும் உறவுகளைப் பொறுத்துள்ளது. அதாவது, போட்டி எந்த முகாமில் வலுவாக இருக்கிறது, வாங்குவோரின் படையிலா, விற்போரின் படையிலா என்பதைப் பொறுத்துள்ளது. தொழில்துறை இரண்டு மாபெரும் படைகளையும் ஒன்றுக்கொன்று எதிராகக் களம்புகச் செய்கிறது. இரு படையிலும் அவைதம் சொந்தத் துருப்புகளுக்கிடையேயும் அணிக்களுக்குள்ளும் போர் நடைபெறுகிறது. எந்தப் படையில் துருப்புகளுக்கிடையே குறைவாகச் சண்டை நிகழ்கிறதோ, அந்தப் படைதான் எதிராளியின் படையை வெற்றி கொள்கிறது.

சந்தையில் 100 பொதி பருத்தி இருப்பதாகவும், அதேவேளையில் 1,000 பொதி பருத்தியை வாங்குவதற்கு ஆட்கள் இருப்பதாகவும் வைத்துக்கொள்வோம். இதன்படி, தேவையோ இருப்பைக்காட்டிலும் பத்து மடங்கு கூடுதலாக இருக்கிறது. [எனவே] வாங்குவோரிடையே போட்டி மிகவும் பலமாய் இருக்கும். அவர்களுள் ஒவ்வொருவரும் ஒரு பொதியை, முடிந்தால் 100 பொதிகளையுமே வாங்கிவிட முயல்கின்றனர். இந்த எடுத்துக்காட்டு தன்னிச்சையான ஊகமல்ல. ஒருசில முதலாளிகள் கூட்டுச் சேர்ந்துகொண்டு 100 பொதிகளையல்ல, உலகில் விற்பனைக்குள்ள பருத்தி அனைத்தையும் வாங்க முயன்றபோது வணிகத்துறை வரலாற்றில் பருத்திக்குத் தட்டுப்பாடு ஏற்பட்ட காலகட்டங்களைச் சந்தித்துள்ளோம். ஆகவே, தரப்பட்ட எடுத்துக்காட்டில், வாங்குவோர் ஒருவர் பருத்திப் பொதிகளுக்கு ஒப்பீட்டளவில் மிக அதிக விலை கொடுக்க முன்வருவதன்மூலம் ஏனைய வாங்குவோரைக் களத்திலிருந்து விரட்டியடிக்க முனைவர். பருத்தி விற்பனையாளர்கள் பகைவரின் துருப்புகள் [வாங்குவோர்] தமக்குள்ளேயே உக்கிரமான போரில் ஈடுபட்டுள்ளதைக் காண்கின்றனர். அவர்களிடமுள்ள நூறு பொதிகளும் விற்பனையாவது அவர்களுக்கு முற்றிலும் உறுதியாகி விட்டது. எதிராளிகள் [வாங்குவோர்] ஒருவருக்கொருவர் போட்டிபோட்டுப் பருத்தியின் விலையை உயர்த்திச்செல்லும் அதேவேளையில், பருத்தியின் விலையைக் குறைக்கும்பொருட்டு விற்பனையாளர்கள் ஒருவருக்கொருவர் குடுமிப்பிடி சண்டை ஏற்பட்டுவிடாதவாறு கவனமாக இருப்பர். எனவே, விற்பனையாளர்களின் படையில் திடீரென அமைதி குடிகொள்கிறது. விற்பனையாளர் அனைவரும் ஒன்றுபட்டு வாங்குவோருக்கு எதிரே பரம சாதுக்களைப்போல இருகை கூப்பி நிற்கின்றனர். முண்டியடித்துக் கொண்டு பருத்தியை வாங்க முனைவோர் தர முன்வரும் விலைகளுக்கும் திட்டவட்டமான வரம்பு உண்டு. இல்லையேல் விற்பனையாளர்கள் கோரும் விலைக்கு வரம்பே இல்லாமல் போய்விடும்.

ஆகவே, ஒரு பண்டத்தின் வரத்து அதன் தேவையைக் காட்டிலும் குறைவாக இருப்பின், விற்பனையாளர்களிடையே மிகச் சிறிதளவே போட்டி நிலவுகிறது. அல்லது அவர்களிடையே போட்டி எதுவும் இருப்பதில்லை. இந்தப் போட்டி எந்தளவுக்குக் குறைகின்றதோ, அந்தளவுக்கு வாங்குவோரிடையே போட்டி அதிகரிக்கிறது. விளைவு: பண்டத்தின் விலைகள் ஏறத்தாழ அதே விகிதத்தில் கணிசமாக உயர்ந்து விடுகின்றன.

இதற்கு நேர்மாறான விளைவை உண்டாக்கும் நேர்மாறான சூழ்நிலை அடிக்கடி ஏற்படுவது அனைவரும் நன்கு அறிந்ததே. தேவையைக் காட்டிலும் மிகவும் கூடுதலான வரத்தும், விற்பனையாளர்களிடையே வெறித்தனமான போட்டாப் போட்டியும், வாங்குவோர் குறைவாக இருப்பதும் சேர்ந்து, படுகேவலமான குறைந்த விலைகளில் பண்டங்களை விற்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தும்.

ஆனால், விலைகளின் ஏற்றம் என்பது என்ன? வீழ்ச்சி என்பது என்ன? அதிக விலை என்பது என்ன? குறைந்த விலை என்பது என்ன? ஒரு மணல் துகளை உருப்பெருக்கியில் (microscope) வைத்துப் பரிசோதிக்கையில் பெரிதாகத் தெரிகிறது. கோபுரத்தை மலையுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் சிறிதாகத் தோன்றுகிறது. [சிறிது-பெரிது, குறைவு-அதிகம் என்பதெல்லாம் ஒப்பீட்டு அளவுகளே]. வரத்துக்கும் தேவைக்குமுள்ள உறவு விலையை நிர்ணயிக்கிறது எனில், வரத்துக்கும் தேவைக்குமுள்ள உறவை நிர்ணயிப்பது எது?

நாம் சந்திக்கின்ற முதலாவது மதிப்பார்ந்த குடிமகனிடம் [ஒரு முதலாளியிடம்] கேட்டுப் பார்ப்போம். அவர் ஒரு கணம்கூடத் தயக்கமின்றி, மகா அலெக்சாண்டரைப்போல, தம் பெருக்கல் வாய்ப்பாட்டைக் கொண்டு, இந்த இயக்க மறுப்பியல் முடிச்சை வெட்டித் தள்ளிடுவார். அவர் நம்மிடம் கூறுவார்: “ஓராண்டில், நான் விற்கும் பண்டங்களின் உற்பத்திச் செலவு எனக்கு 100 பவுண்டு ஆகியிருந்து, அப்பண்டங்களை விற்பதன் மூலம் 110 பவுண்டு கிடைக்கிறதெனில், அது நேர்மையான, போதுமான, நியாயமான இலாபம் ஆகும். ஆனால் இந்தப் பரிவர்த்தனையில் 120 அல்லது 130 பவுண்டு நான் பெற்றால், அது அதிக இலாபமாகும். 200 பவுண்டு அளவுக்குக் கிடைக்குமெனில், அது ஓர் அசாதாரணமான, பேரளவு இலாபமாயிருக்கும்.” ஆகவே, இந்தக் குடிமகனுக்கு அவருடைய இலாபத்தின் அளவுகோலாகப் பயன்படுவது எது? அவருடைய பண்டத்தின் உற்பத்திச் செலவுதான். இந்தப் பண்டங்களுக்குப் பரிவர்த்தனையாக இவற்றைவிட உற்பத்திச் செலவு குறைவாக ஆகும் அளவுக்கான பிற பண்டங்களைப் பெறுவாரெனில், அவர் நட்டமடைகிறார். தம் பண்டங்களுக்குப் பரிவர்த்தனையாக அவற்றைவிட உற்பத்திச் செலவு அதிகமாக ஆகும் அளவுக்கான பிற பண்டங்களைப் பெறுவாரெனில், அவர் இலாபமடைகிறார். அவர் தம் பண்டங்களின் பரிவர்த்தனை மதிப்பு உற்பத்திச் செலவைக் காட்டிலும் எந்த அளவுக்கு அதிகமாக அல்லது குறைவாக இருக்கிறது என்பதைக் கொண்டு இலாபத்தின் வீழ்ச்சி அல்லது உயர்வை மதிப்பிடுகிறார்.

வரத்துக்கும் தேவைக்குமுள்ள மாறுபடும் உறவானது எவ்வாறு ஒருநேரம் விலை ஏற்றத்தையும் மறுநேரம் விலை வீழ்ச்சியையும், ஒருநேரம் அதிக விலையையும் மறுநேரம் குறைந்த விலையையும் தோற்றுவிக்கிறது என்பதை நாம் பார்த்தோம். குறைவான வரத்தினாலோ, அளவுமீறி அதிகரித்த தேவையினாலோ ஒரு பண்டத்தின் விலை கணிசமாக உயருமெனில், அதே அளவுக்கு வேறொரு பண்டத்தின் விலை வீழ்ச்சி கண்டாக வேண்டும். ஏனெனில், பரிவர்த்தனையில் ஒரு பண்டத்துக்கு ஈடாகப் பிற பண்டங்கள் பெறப்படும் விகிதத்தைப் பண அளவில் குறிப்பதே அப்பண்டத்தின் விலையாகும். எடுத்துக்காட்டாக, ஒரு கஜம் பட்டுத்துணியின் விலை இரண்டு ஷில்லிங்கிலிருந்து மூன்று ஷில்லிங்காக உயருமெனில், வெள்ளியின் விலை பட்டுத்துணியுடன் ஒப்பிடுகையில் வீழ்ச்சி அடைகிறது. இதுபோன்றே, விலை மாறாமல் நிலையாக இருக்கும் ஏனைய பண்டங்கள் அனைத்தின் விலைகளும் பட்டுத்துணியின் விலையுடன் ஒப்பிடுகையில் வீழ்ச்சி அடைகின்றன. பரிவர்த்தனையில் அதே அளவு பட்டுத்துணியைப் பெற, [முன்னைக் காட்டிலும்] அதிக அளவில் இந்தப் பிற பண்டங்களைப் தந்தாக வேண்டும். ஒரு குறிப்பிட்ட பண்டத்தின் விலையேற்றம் ஏற்படுத்தும் விளைவு என்னவாக இருக்கும்? செழித்தோங்கும் தொழில்பிரிவில் திரளான மூலதனம் கொட்டப்படும். அம்மூலதனம் வழக்கத்துக்கு அதிகமான இலாபத்தை ஈட்டித் தரும்வரை அல்லது இன்னும் சரியாகச் சொல்வதெனில், மிகை உற்பத்தியின் காரணமாக இத்தொழில்பிரிவின் உற்பத்திப் பொருள்களுடைய விலை உற்பத்திச் செலவுக்கும் கீழே வீழும்வரை, சாதகமான தொழில்பிரிவின் பகுதிகளுக்கு இவ்வாறு மூலதனம் திருப்பிவிடப்படுதல் தொடர்ந்து நடைபெறும்.

இதற்கு மாறாக, ஒரு பண்டத்தின் விலை அதன் உற்பத்திச் செலவுக்கும் கீழே வீழுமெனில், அப்பண்டத்தின் உற்பத்தியிலிருந்து மூலதனம் வெளியே எடுக்கப்படும். காலத்துக்கு ஒவ்வாததாகி, அதனால் அழிந்தொழிய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள தொழில்பிரிவைத் தவிர்த்துப் பிறவற்றில், மூலதனம் வெளியே எடுக்கப்படுவதன் காரணமாக, அத்தகைய ஒரு பண்டத்தின் உற்பத்தியானது (அதாவது அதன் வரத்து) தொடர்ந்து குறையும். எந்த அளவுக்கு எனில், அதன் வரத்து தேவைக்குச் சமமாய் ஆகி, அப்பண்டத்தின் விலை அதன் உற்பத்திச் செலவை ஈடுகட்டும் அளவுக்கு மீண்டும் உயரும்வரை அதன் உற்பத்தி குறையும். அல்லது இன்னும் சரியாகச் சொல்வதெனில், வரத்தானது தேவைக்கும் கீழே சரிந்து, அப்பண்டத்தின் விலை அதன் உற்பத்திச் செலவுக்கும் மேலே உயரும்வரை அதன் உற்பத்தி குறையும். ஏனெனில், ஒரு பண்டத்தின் நடப்பு விலை எப்போதும் அதன் உற்பத்திச் செலவைவிடக் கூடுதலாக அல்லது குறைவாக இருக்கிறது.

மூலதனம் எவ்வாறு இடையறாது ஒரு தொழில்பகுதியிலிருந்து வெளியேறி இன்னொரு தொழில்பகுதியினுள் நுழைகிறது என்பதை நாம் காண்கிறோம். அதிக விலை அளவுக்கதிகமான மூலதன வருகையையும், குறைந்த விலை அளவுக்கதிகமான மூலதன வெளியேற்றத்தையும் ஏற்படுத்துகின்றன.

எவ்வாறு வரத்து மட்டுமன்றி தேவையும்கூட உற்பத்திச் செலவால் நிர்ணயிக்கப்படுகிறது என்பதை வேறொரு கண்ணோட்டத்திலிருந்து நாம் விளக்க முடியும். ஆனால், இது நாம் எடுத்துக்கொண்ட சாரப்பொருளைவிட்டு விலகி நம்மை நெடுந்தொலைவு இட்டுச் சென்றுவிடும்.

எவ்வாறு வரத்து, தேவை இவற்றின் ஏற்றயிறக்கம் எப்போதும் ஒரு பண்டத்தின் விலையை உற்பத்திச் செலவுக்குத் திரும்பிவரச் செய்கிறது என்பதை இப்போதுதான் பார்த்தோம். ஒரு பண்டத்தின் உண்மையான விலை எப்போதும் நிச்சயமாக அப்பண்டத்தின் உற்பத்திச் செலவைவிடக் கூடுதலாக அல்லது குறைவாக இருக்கிறது. என்றாலும், ஏற்றமும் இறக்கமும் ஒன்றையொன்று சமன் செய்துவிடுகின்றன. எனவே, குறிப்பிட்ட ஒரு காலப்பகுதியில், தொழில்துறையின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் சேர்த்துப் பார்த்தால், பண்டங்கள் அவற்றின் உற்பத்திச் செலவுக்கு ஏற்ப ஒன்றுக்கொன்று பரிவர்த்தனை செய்து கொள்ளப்படுகின்றன. அப்பண்டங்களின் விலை இவ்வாறாக அவற்றின் உற்பத்திச் செலவால் நிர்ணயிக்கப்படுகிறது.

உற்பத்திச் செலவால் விலை நிர்ணயிக்கப்படுவதை முதலாளித்துவப் பொருளாதார அறிஞர்களின் அர்த்தத்தில் புரிந்துகொள்ளக் கூடாது. பண்டங்களின் சராசரி விலை உற்பத்திச் செலவுக்குச் சமம், இதுவே விதி எனப் பொருளாதார அறிஞர்கள் கூறுகின்றனர். ஏற்றம் ஓர் இறக்கத்தின்மூலமும், இறக்கம் ஓர் ஏற்றத்தின்மூலமும் சரிக்கட்டப்படும் இந்த அராஜக (anarchic) இயக்கத்தை ஒரு தற்செயல் நிகழ்வாக அவர்கள் கருதுகின்றனர். இதைப்போன்றே நாமும் ஏற்றயிறக்கங்களை விதியாகவும், உற்பத்திச் செலவால் விலை நிர்ணயிக்கப்படுவதைத் தற்செயல் நிகழ்வாகவும் கருத முடியும். உண்மையில் வேறுசில பொருளாதார அறிஞர்கள் அவ்வாறே கருதியுள்ளனர். ஆனால், மேலும் நெருங்கிச் சென்று நோக்கினால், துல்லியமாக இந்த ஏற்றயிறக்கங்கள்தாம் தம்முடன் படுபயங்கர நாசங்களைக் கொண்டுவந்து, ஒரு பூகம்பம்போல் முதலாளித்துவச் சமுதாயத்தை அதன் அடித்தளங்களோடு ஆடிக் குலுங்க வைக்கின்றன என்பது தெரியும். துல்லியமாக, இந்த ஏற்றயிறக்கங்கள்தாம் விலையை உற்பத்திச் செலவோடு ஒத்துப் போகுமாறு கட்டாயப்படுத்துகின்றன. இந்த ஒழுங்கற்ற இயக்கத்தின் முழுமையில்தான் அதன் ஒழுங்கைக் காண வேண்டும். இந்தத் தொழில்துறை அராஜகத்தின் முழுமையான நிகழ்வுப் போக்கில், இந்தச் சுழல் இயக்கத்தில், போட்டியானது ஒரு மட்டுமீறிய மிகையை மற்றொரு மட்டுமீறிய மிகையால் ஈடுகட்டுகிறது எனலாம்.

இவ்வாறாக, பண்டங்களின் விலை உற்பத்திச் செலவுக்கு மேலே உயரும் காலங்கள், அது உற்பத்திச் செலவுக்குக் கீழே வீழும் காலங்களாலும், கீழ்விழும் காலங்கள் மேலுயரும் காலங்களாலும் சரிக்கட்டப்படுகின்றன என்பதற்கு உட்பட்டு, ஒரு பண்டத்தின் விலை உண்மையிலேயே அப்பண்டத்தின் உற்பத்திச் செலவால் நிர்ணயிக்கப்படுகிறது என்பதை நாம் காண்கிறோம். ஒரு தொழில்பிரிவின் குறிப்பிட்ட தனியொரு உற்பத்திப் பொருளுக்கு இது பொருந்தாது, அத்தொழில்பிரிவு முழுமைக்கு மட்டுமே பொருந்தும் என்பது உண்மையே. அதுபோலவே, ஒரு தனிப்பட்ட தொழிலதிபருக்கு இது பொருந்தாது, தொழிலதிபர்களின் ஒட்டுமொத்த வர்க்கத்துக்கு மட்டுமே பொருந்தும்.

[ஒரு பண்டத்தின்] விலை [அதன்] உற்பத்திச் செலவால் நிர்ணயிக்கப்படுகிறது என்று கூறுவது, ஒரு பண்டத்தின் விலை அதன் உற்பத்திக்குத் தேவைப்படும் உழைப்புநேரத்தால் நிர்ணயிக்கப்படுகிறது என்று கூறுவதற்குச் சமமாகும். ஏனெனில், உற்பத்திச் செலவு முதலாவதாக, மூலப்பொருள்களையும் உற்பத்திக் கருவிகள் முதலியவற்றின் தேய்மானத்தையும் உள்ளடக்கியுள்ளது. அதாவது, உற்பத்தி செய்யக் குறிப்பிட்ட வேலைநாட்கள் தேவைப்படும் தொழில்துறைப் பொருள்களை உள்ளடக்கியுள்ளது. எனவே, குறிப்பிட்ட அளவு உழைப்புநேரத்தைக் குறிக்கின்ற தொழில்துறைப் பொருள்களை உள்ளடக்கியுள்ளது எனலாம். உற்பத்திச் செலவு இரண்டாவதாக, கால அளவால் அளவிடப்படும் நேரடியான உழைப்பை உள்ளடக்கியுள்ளது.


அடுத்த பகுதி: கூலி எதனால் நிர்ணயிக்கப்படுகிறது?

முந்தைய பகுதி: கூலி என்பது என்ன? அது எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது?

கூலியுழைப்பும் மூலதனமும் - பொருளடக்கம்


வேறு மொழிகள் | தமிழ்ப் பகுதி | ஆங்கிலப் பகுதி