வேறு மொழிகள் | தமிழ்ப் பகுதி | ஆங்கிலப் பகுதி

கூலியுழைப்பும் மூலதனமும்
(கார்ல் மார்க்ஸ்)
தமிழாக்கம்: மு.சிவலிங்கம்

பொருளடக்கம் | முந்தைய பகுதி | அடுத்த பகுதி

கூலி எதனால் நிர்ணயிக்கப்படுகிறது?


பண்டங்களின் விலையைப் பொதுவாக ஒழுங்குபடுத்தும் அதே பொது விதிகள்தாம், கூலியையும், அதாவது உழைப்புச் சக்தியின் விலையையும் ஒழுங்குபடுத்துகின்றன. வரத்துக்கும் தேவைக்குமுள்ள உறவைப் பொறுத்தும், உழைப்புச் சக்தியை வாங்குவோராகிய முதலாளிகளுக்கும், உழைப்புச் சக்தியை விற்போராகிய தொழிலாளர்களுக்கும் இடையேயான போட்டியின் திசைவழியைப் பொறுத்தும், கூலி சிலவேளை உயரும், சிலவேளை குறையும். கூலியின் ஏற்றயிறக்கங்கள் பொதுவாகப் பண்டங்களுடைய விலையின் ஏற்றயிறக்கத்துக்கு ஏற்ப அமைகின்றன. ஆனால் இந்த ஏற்றயிறக்கங்களின் வரம்புகளுக்குள், உழைப்புச் சக்தியின் விலை, உற்பத்திச் செலவால், அதாவது உழைப்புச் சக்தியெனும் இந்தப் பண்டத்தை உற்பத்தி செய்வதற்குத் தேவையான உழைப்பு நேரத்தால் நிர்ணயிக்கப்படும்.

அப்படியானால், உழைப்புச் சக்தியின் உற்பத்திச் செலவு எவ்வளவு?

தொழிலாளி, தொடர்ந்து ஒரு தொழிலாளியாக இருக்கும் வகையில் அவரைப் பராமரிக்கவும், ஒரு தொழிலாளியாக இருக்க அவருக்கு அளிக்கப்படும் கல்விக்கும் பயிற்சிக்கும் தேவையான செலவுதான் அது.

ஆகவே, ஒரு குறிப்பிட்ட வகை வேலைக்குப் பயிற்றுவிப்பதற்கான காலம் எந்த அளவுக்குக் குறைவாக இருக்கிறதோ, அந்த அளவுக்குத் தொழிலாளியின் உற்பத்திச் செலவு குறைவாக இருக்கும். அந்த அளவுக்குத் தொழிலாளியின் உழைப்புக்கான விலையும், அதாவது கூலியும் குறைவாக இருக்கும். வேலை பழகும் காலம் தேவைப்படாத, தொழிலாளியின் உடல்ரீதியான இருப்பு மட்டுமே போதுமானதாயுள்ள தொழில்பிரிவுகளில், அவருடைய உற்பத்திக்குத் தேவையான செலவு என்பது, அவரை வேலை செய்யும் நிலையில் வைத்திருக்கத் தேவையான பண்டங்களுக்கு ஏறத்தாழ சமமாகிவிடுகின்றது. எனவே, அவருடைய வேலைக்கான விலை, தேவையான பிழைப்பாதாரப் பொருள்களின் விலையால் நிர்ணயிக்கப்படும்.

எனினும், இங்கு மற்றொரு கருத்தும் கவனத்துக்கு உரியதாகிறது. தொழிலதிபர், தம் உற்பத்திச் செலவையும், அதற்கேற்றவாறு உற்பத்திப் பொருளின் விலையையும் கணக்கிடுபவர், உழைப்புக் கருவிகளின் தேய்மானத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்கிறார். எடுத்துக்காட்டாக, 1,000 ஷில்லிங் விலைகொடுத்து அவர் வாங்கும் ஓர் எந்திரம் 10 ஆண்டுகள்வரை பயன்படுத்தப்படுகிறது எனக் கொள்வோம். 10 ஆண்டுகள் கழித்து இந்தத் தேய்ந்துபோன எந்திரத்துக்குப் பதிலாகப் புதியது ஒன்றை வாங்கிக்கொள்ளும் பொருட்டு, ஆண்டுதோறும் பண்டங்களின் விலையில் 100 ஷில்லிங் கூட்டுகிறார். இதே வழிமுறையின்படி, சாதாரண உழைப்புச் சக்தியின் உற்பத்திச் செலவில், தொழிலாளர்களின் இனப் பெருக்கத்துக்கு ஆகும் செலவையும் சேர்த்தாக வேண்டும். தொழிலாளர் இனம் தன்னைத்தானே பெருகச் செய்யவும், தேய்ந்து ஓய்ந்துபோன தொழிலாளர்களுக்குப் பதிலாகப் புதியவர்களைத் தோற்றுவித்துக் கொள்ளவும் இனப்பெருக்கமே வழிசெய்கிறது. எனவே, எந்திரத்தின் தேய்மானம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் அதே வழிமுறையில் தொழிலாளியின் தேய்மானமும் கணக்கிடப்படுகிறது.

இதன்படி, சாதாரண உழைப்புச் சக்தியின் உற்பத்திச் செலவு என்பது தொழிலாளியின் பிழைப்புக்கும் இனப்பெருக்கத்துக்கும் ஆகும் செலவு ஆகும். பிழைப்புக்கும் இனப்பெருக்கத்துக்கும் ஆகும் செலவின் விலையே கூலி ஆகிறது. இவ்வாறு நிர்ணயிக்கப்படும் கூலி, குறைந்தபட்சக் கூலி என்றழைக்கப்படுகிறது. இந்தக் குறைந்தபட்சக் கூலி, உற்பத்திச் செலவைக் கொண்டு நிர்ணயிக்கப்படும் பண்டங்களின் விலையைப் போன்றே, தனிப்பட்ட ஒருவருக்குப் பொருந்தாது. ஒட்டுமொத்த இனத்துக்கே பொருந்தும். தனிப்பட்ட தொழிலாளர்கள், உண்மையில் இலட்சக்கணக்கான தொழிலாளர்கள், பிழைப்பு நடத்தவும் தங்களை இனப்பெருக்கம் செய்துகொள்வும் முடிகிற அளவுக்குப் போதுமான கூலி பெறுவதில்லை. ஆனால், ஒட்டுமொத்தத் தொழிலாளி வர்க்கத்தின் கூலியானது அதன் ஏற்றயிறக்கங்களின் வரம்புகளுக்குள், இந்தக் குறைந்தபட்ச அளவில் தன்னைத் தக்கவைத்துக் கொள்கிறது.

கூலியையும், அதேபோல மற்ற பிற பண்டங்கள் ஒவ்வொன்றின் விலையையும் ஒழுங்குபடுத்தும் மிகவும் பொதுவான விதிகளைப் பொறுத்தவரை நாம் ஒரு புரிதலுக்கு வந்துவிட்டதால், இனி நம் சாரப்பொருளின் தனித்தனி விவரங்களைப் பரிசீலிக்கலாம்.


அடுத்த பகுதி: மூலதனத்தின் இயல்பும் வளர்ச்சியும்

முந்தைய பகுதி: ஒரு பண்டத்தின் விலை எதனால் நிர்ணயிக்கப்படுகிறது?

கூலியுழைப்பும் மூலதனமும் - பொருளடக்கம்


வேறு மொழிகள் | தமிழ்ப் பகுதி | ஆங்கிலப் பகுதி