வேறு மொழிகள் | தமிழ்ப் பகுதி | ஆங்கிலப் பகுதி

கற்பனாவாத சோஷலிசமும் விஞ்ஞான சோஷலிசமும்
(ஃபிரெடெரிக் ஏங்கெல்ஸ்)
தமிழாக்கம்: மு.சிவலிங்கம்

பொருளடக்கம் | முந்தைய பகுதி | அடுத்த பகுதி

அத்தியாயம்-2
[இயக்கவியலும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும்]


இதற்கிடையில் 18-ஆம் நூற்றாண்டின் ஃபிரெஞ்சுத் தத்துவத்துடன் கூடவேயும் அதற்குப் பின்பும், புதிய ஜெர்மன் தத்துவம் உதித்தெழுந்தது. ஹெகலின் தத்துவத்தில் அது உச்சநிலையை அடைந்திருந்தது. அறிவாய்வின் (reasoning) மிக உயர்ந்த வடிவமாக இயக்கவியலை மீண்டும் எடுத்துக் கொண்டதுதான் ஜெர்மன் தத்துவத்தின் தனிச்சிறப்பு. பண்டைய கிரேக்கத் தத்துவ அறிஞர்கள் அனைவரும் பிறப்பிலேயே இயல்பான இயக்கவியல்வாதிகளாக இருந்தனர். இவர்கள் அனைவருள்ளும் பல்துறை அறிவுசான்றவரான அரிஸ்டாட்டில் (Aristotle) இயக்கவியல் சிந்தனையின் மிகமிகத் தலையாய வடிவங்களை ஏற்கெனவே பகுத்தாய்ந்திருந்தார். இதற்கு மாறாகப் [பிற்காலத்திய] புதிய ஜெர்மன் தத்துவமானது, முக்கியமாய் ஆங்கிலச் செல்வாக்கின் விளைவாக, அறிவாய்வுப் போக்கில் இயக்க மறுப்பியல் பாங்கு (metaphysical mode of reasoning) எனப்படும் போக்குடன் மென்மேலும் இறுக்கமாக ஒன்றிவிட்டது. இயக்கவியலை அறிவுத்திறனோடு விளக்கிக் கூறியவர்கள் (எ-டு: டெக்கார்ட்டே (Descartes), ஸ்பினோஸா (Spinoza)) இதிலும்கூட இருந்தார்கள் என்ற போதிலும் இது நடைபெற்றது. 18-ஆம் நூற்றாண்டின் ஃபிரெஞ்சுத் தத்துவ அறிஞர்கள் அவர்களின் தனிச்சிறப்பான தத்துவார்த்த படைப்புகளில் என்னதான் சொல்லியிருந்த போதிலும், இதே இயக்க மறுப்பியல் பாங்குதான் அவர்கள்மீது ஏறத்தாழ முழுமையாக ஆதிக்கம் செலுத்தியது. இருந்த போதிலும், வரம்புக்குட்பட்ட பொருளில் தத்துவம் என்று சொல்லப்படுவதற்கு வெளியே ஃபிரெஞ்சு நாட்டினர் இயக்கவியலின் தலைசிறந்த படைப்புகளை உருவாக்கினர். டிட்ரோவின் Le Neveu de Rameau [ரமோவின் மருகன்], ரூஸோவின் Discours sur l'origine et les fondements de l'inegalite parmi less hommes [மனிதர்களிடையே சமத்துவமின்மை தோன்றியது பற்றிய ஆய்வுரை] ஆகியவற்றை மட்டும் கவனத்தில் கொள்ளுமாறு நாம் அறிவுறுத்தினால் போதும் [எனக் கருதுகிறேன்]. இந்த இரு சிந்தனைப் பாங்குகளின் தலையாய பண்பினை இங்குச் சுருக்கமாக எடுத்துரைக்கிறோம்.

பொதுவாக இயற்கையையோ, மனிதகுலத்தின் வரலாற்றையோ, நம் சொந்த அறிவுசார் செயல்பாட்டையோ கவனத்தில் எடுத்துக் கொண்டு ஆழமாகச் சிந்தித்துப் பார்க்கும்போது, முதலில் நாம், உறவுகளும் எதிர்வினைகளும், வரிசைமுறைகளும் தொகுதிமுறைகளும் தமக்குள் முடிவின்றிப் பின்னிப் பிணைந்து சிக்கலாகிக் கிடக்கும் ஒரு சித்திரத்தையே காண்கிறோம். இதில் எதுவும் அப்படியே, அங்கேயே, முன்பிருந்தவாறு தொடர்ந்து இருக்கவில்லை. அனைத்துமே இயங்கிக்கொண்டும், மாறிக்கொண்டும், தோன்றிக்கொண்டும், அழிந்துகொண்டும் இருக்கக் காண்கிறோம். எனவே, முதலில் நாம், இந்தச் சித்திரத்தின் தனித்தனிப் பகுதிகள் இன்னமும் பெருமளவுக்குப் பின்னணியிலே வைக்கப்பட்ட நிலையில், அச்சித்திரத்தை முழுமையான ஒன்றாகவே பார்க்கிறோம். இயங்குகின்ற, சேர்கின்ற, இணைக்கப்படுகின்ற பொருள்களைக் காட்டிலும் அப்பொருள்களின் இயக்கங்களையும், நிலைமாற்றங்களையும், இணைப்புகளையும் மட்டுமே கவனிக்கின்றோம். உலகைப் பற்றிய முதிராத, வளர்ச்சியடையாத, ஆயினும் அகநிலையில் பிழையற்ற இந்தக் கருத்துருவே பண்டைய கிரேக்கத் தத்துவத்தின் கருத்துருவாகும். முதன்முதலில் ஹெராக்லிட்டஸ் (Heraclitus) இதைத் தெளிவாக வரையறுத்துக் கூறினார்: ஒவ்வொன்றும் இருந்துகொண்டும், இல்லாமலும் இருக்கிறது. ஏனெனில், ஒவ்வொன்றும் நிலையற்றதாக இருக்கிறது, இடையறாது மாறிக்கொண்டும், இடையறாது தோன்றிக்கொண்டும், அழிந்துகொண்டும் இருக்கிறது.

ஆனால் இந்தக் கருத்துரு, தோற்றங்களுடைய ஒட்டுமொத்தத் சித்திரத்தின் பொதுவான தன்மையைச் சரியாகவே வெளிப்படுத்தினும், அச்சித்திரத்தில் அடங்கியுள்ள உட்கூறுகளை விளக்கிட இது போதுமானதாக இல்லை. அக்கூறுகளைப் புரிந்து கொள்ளாதவரை, முழுமையான சித்திரம் பற்றிய ஒரு தெளிவான கருத்தை நாம் கொண்டிருக்க முடியாது. அக்கூறுகளைப் புரிந்து கொள்ளும் பொருட்டு, அவற்றின் இயற்கையான அல்லது வரலாற்று ரீதியான தொடர்புகளிலிருந்து அவற்றைப் பிரித்தெடுத்து, அவை ஒவ்வொன்றையும் தனித்தனியே அதன் இயல்பு, தனிச்சிறப்பான காரணங்கள், விளைவுகள், இன்னபிற குறித்துப் பரிசீலித்தாக வேண்டும். முதன்மையாக இது, இயற்கை விஞ்ஞானம், வரலாற்று ஆராய்ச்சி ஆகியவற்றின் பணியாகும். பண்டைய காலத்துக் கிரேக்கர்கள் விஞ்ஞானத்தின் இந்தக் கிளைகளை, மிகச்சரியான காரணங்களுக்காக, கீழ்நிலைக்கு உரியனவாக ஒதுக்கி வைத்திருந்தனர். ஏனெனில், இந்த விஞ்ஞானங்களின் மீது செல்வாக்குச் செலுத்த அதற்கான விவரங்களை முதலில் அவர்கள் திரட்ட வேண்டியிருந்தது. இயற்கை சார்ந்த, வரலாறு சார்ந்த விவரங்களை, குறிப்பிட்ட அளவுக்குத் திரட்டியாக வேண்டும். அதன்பிறகே எந்த வகையான விமர்சனப் பகுத்தாய்வும், ஒப்பீடும் இருக்க முடியும்; வகைகளில், படிநிலைகளில், இனங்களில் ஒழுங்கமைக்கவும் முடியும். எனவே, துல்லியமான இயற்கை விஞ்ஞானங்களின் அடிப்படைகளை முதன்முதலாக அலெக்சாண்டிரிய காலகட்டத்தில்[41] கிரேக்கர்கள் உருவாக்கினர். அதன்பின் மத்திய காலத்தில் அரேபியர்கள் உருவாக்கினர். உண்மையான இயற்கை விஞ்ஞானம் 15-ஆம் நூற்றாண்டின் இரண்டாவது பாதியில் தொடங்கியது. அதுமுதற்கொண்டு, தொடர்ந்து அதிகரித்துவரும் வேகத்தில் அது முன்னேறி வந்துள்ளது. இயற்கையை அதன் தனித்தனிப் பிரிவுகளில் பகுத்தாய்தல், இயற்கை சார்ந்த வேறுபட்ட நிகழ்வுப்போக்குகளையும், பொருள்களையும் திட்டவட்டமான இனக்குழுக்களில் வகைப்படுத்தல். அங்ககப் பொருள்களின் அகநிலைக் கட்டமைப்பை அவற்றின் பன்முக வடிவங்களிலும் நுணுகி ஆய்தல் - இவைதாம் கடந்த 400 ஆண்டு காலத்தில், இயற்கையைப் பற்றிய நம் அறிவில் ஏற்பட்ட பிரும்மாண்ட முன்னேற்றப் படிகளின் அடிப்படை நிபந்தனைகள் ஆகும். ஆனால், இந்தவகை ஆய்வுமுறையானது, இயற்கைப் பொருள்களையும் நிகழ்வுப் போக்குகளையும் [பிரபஞ்சத்தின்] பிரும்மாண்டமான முழுமையுடன் அவற்றுக்குள்ள தொடர்புகளிலிருந்து பிரித்துத் தனிமைப்படுத்தி நோக்கும் பழக்கத்தையும், அவற்றின் இயக்கத்தில் அல்லாது ஓய்வில், அவை அடிப்படையில் மாறிகள் (variables) என்ற நிலையில் அல்லாது மாறிலிகள் (constants) என்ற நிலையில், அவற்றின் வாழ்வில் அல்லாது அவற்றின் மரணத்தில் வைத்து நோக்கும் பழக்கத்தையும் மரபுரிமையாக நம்மிடையே விட்டுச் சென்றுள்ளது. பொருள்களை நோக்குவதற்கான இந்த வழிமுறையை பேக்கனும் லோக்கும் இயற்கை விஞ்ஞானத்திலிருந்து தத்துவத்துக்கு இடம் மாற்றியபோது, அது கடந்த நூற்றாண்டுக்கே உரிய தனித்துவமான, குறுகிய, இயக்க மறுப்பியல் சிந்தனைப் பாங்கினைத் தோற்றுவித்தது.

இயக்க மறுப்பியல்வாதிக்கு, பொருள்களும் அவற்றின் மனப் பிரதிபலிப்புகளும், கருத்துகளும் தனித்தனியானவை; அவற்றை ஒன்றின்பின் ஒன்றாகவும் ஒன்றை மற்றொன்றோடு தொடர்புபடுத்தாமலும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். அவை நிலையான, நெகிழ்வற்ற, என்றைக்குமாய்த் தரப்பட்ட ஆய்வுப் பொருள்கள் ஆகும். முற்றிலும் ஒத்துப் போகாத முரண்நிலைகளில்தான் அவர் சிந்திக்கிறார். ”அவருடைய பேச்செல்லாம் 'ஆம், ஆம்; இல்லை, இல்லை' என்பதுதான்; அவற்றுக்கு அதிகமாக எதுவாக இருந்தாலும் அது பாவத்திலே பிறந்தது.” அவரைப் பொறுத்தவரை, ஒரு பொருள் இருக்கிறது அல்லது இருக்கவில்லை; ஒரு பொருள் அதுவாகவும், அதே நேரத்தில் வேறொன்றாகவும் இருக்க முடியாது. நேர்நிலையும் எதிர்நிலையும் ஒன்றையொன்று முற்றிலும் விலக்குகிறது; காரணமும் விளைவும் ஒன்றுக்கொன்று விட்டுக் கொடுக்காத முரண்நிலையில் நிற்கின்றன.

முதல்பார்வையில் இந்தச் சிந்தனைப் பாங்கு மிகவும் அறிவார்ந்ததாகவே நமக்குத் தோன்றுகிறது. ஏனெனில், இது மேம்பட்ட பொது அறிவுணர்வு (commonsense) என்று சொல்லப்படும் சிந்தனை முறையாகும். இந்த மேம்பட்ட பொது அறிவுணர்வானது, அதற்குரிய நான்கு சுவர்களின் எளிய ஆட்சி எல்லைக்குள் இருக்கும்போது மதிக்கத் தக்கதாகத் திகழ்கிறது. ஆராய்ச்சி என்னும் பரந்த உலகினுள், ஆபத்தான பயணத்தில் அடியெடுத்து வைக்கும்போது, அது விந்தைமிகு அபாயங்களை நேரடியாக எதிர்கொள்கிறது. மேலும், இயக்க மறுப்பியல் சிந்தனைப் பாங்கானது, பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் குறிப்பிட்ட ஆய்வுப் பொருளுக்குத் தக்கவாறு பரப்பு மாறுபடுகின்ற பற்பல செயல்களங்களில் நியாயப்படுத்தக் கூடியதாகவும், அவசியமானதாகவும் இருப்பினும், இறுதியாக ஒரு கட்டத்தில் அது ஓர் எல்லையை வந்தடைகிறது; இந்த எல்லைக்கு அப்பால், அது ஒருபக்கச் சார்புடையதாக, வரம்புக்கு உட்பட்டதாக, அருவமானதாக, தீர்க்க முடியாத முரண்பாடுகளில் சிக்கி மூழ்கிப் போனதாக ஆகிவிடுகிறது. தனித்தனிப் பொருள்களில் ஆழ்ந்து கவனம் செலுத்துகையில், அவற்றுக்கு இடையேயான தொடர்பினை அது மறந்துவிடுகிறது. அப்பொருள்களின் இருத்தலில் கவனம் செலுத்துகையில், அந்த இருத்தலின் தொடக்கத்தையும் முடிவையும் மறந்துவிடுகிறது. அவற்றின் ஓய்வில் கவனம் செலுத்துகையில் அவற்றின் இயக்கத்தை மறந்துவிடுகிறது. மரங்களைப் பார்க்கும் அது காட்டினைப் பார்க்க முடியவில்லை. [தனிக் கூறுகளை மட்டும் பார்த்து, ஒட்டுமொத்த முழுமையைப் பார்க்கத் தவறுகிறது].

அன்றாட நிகழ்வுகளைப் பொறுத்தவரை நமக்குத் தெரியும், [ஐயமின்றி] சொல்லவும் முடியும். எடுத்துக்காட்டாக, ஒரு விலங்கு உயிரோடு இருக்கிறதா இல்லையா என்று நம்மால் நிச்சயமாகச் சொல்ல முடியும். ஆனால், நெருங்கிச் சென்று ஆய்கையில், பல சூழ்நிலைகளில் இது மிகவும் சிக்கலான கேள்வியாக இருக்கக் காண்கிறோம். சட்ட வல்லுநர்கள் இதை நன்கு அறிவர். தாயின் கருப்பையிலிருக்கும் சிசுவைக் கொல்லுதல் எந்த வரம்புக்கு அப்பால் கொலைக்குற்றம் ஆகிறது என்று அறிவுக்குகந்த ஒரு வரம்பைக் கண்டறியச் சட்ட வல்லுநர்கள் எவ்வளவோ தங்கள் மூளையைக் கசக்கிப் பார்த்தும் பலனில்லை. மரணம் நிகழும் தருணத்தை ஐயமின்றித் தீர்மானிப்பதும் இதேபோல இயலாதது. ஏனெனில், மரணம் என்பது உடனடியாக நடைபெறும் நொடிநேர நிகழ்வன்று, மிகவும் நீடித்ததொரு நிகழ்வுப்போக்கு என்பதை உடலியங்கியல் நிரூபித்துள்ளது.

அதுபோன்றே, ஒவ்வோர் அங்கக உயிரினமும் ஒவ்வொரு நொடியும் அதுவாகவும், அதே நேரத்தில் அதுவல்லாததாகவும் இருக்கிறது. ஒவ்வொரு நொடியும் அது வெளியிலிருந்து தரப்படும் பொருளைத் தன்மயமாக்கிக் கொள்கிறது; பிற பொருளை [தன்னுள்ளிருந்து] வெளியேற்றுகிறது. ஒவ்வொரு நொடியும் அதன் உடலில் சில உயிரணுக்கள் மடிகின்றன, வேறுசில உயிரணுக்கள் புதிதாகத் தோன்றுகின்றன. நீண்ட காலத்திலோ, குறுகிய காலத்திலோ அதன் உடலின் பொருள் முழுவதுமாகப் புதுப்பிக்கப்படுகிறது, பொருளின் பிற [புதிய] மூலக்கூறுகளால் மாற்றீடு செய்யப்படுகிறது. எனவே, ஒவ்வோர் அங்கக உயிரினமும் எப்போதும் தானேயாகவும், அதேநேரத்தில் தானல்லாத பிறிதொன்றாகவும் இருக்கிறது.

மேலும், நெருங்கிச் சென்று ஆராய்கையில் ஒரு முரண்நிலையின் இரு துருவங்களும், எடுத்துக்காட்டாக, நேர்நிலையும் எதிர்நிலையும், அவை எந்த அளவுக்கு எதிரெதிராக இருக்கின்றனவோ அந்த அளவுக்குப் பிரிக்க முடியாதனவாகவும் இருப்பதைக் காண்கிறோம். அவற்றுக்கிடையே எவ்வளவுதான் எதிர்ப்பு இருந்தபோதிலும், அவை பரஸ்பரம் [ஒன்றுள் ஒன்று] ஊடுருவக் காண்கிறோம். அதே முறையில், காரணம், விளைவு ஆகிய கருத்துருக்கள் தனிப்பட்ட நிகழ்வுகளுக்குப் பயன்படுத்துகையில் மட்டுமே உண்மையாக [காரணம் காரணமாகவும், விளைவு விளைவாகவும்] இருக்கக் காண்கிறோம். இந்தத் தனிப்பட்ட நிகழ்வுகளை, அவை பிரபஞ்ச முழுமையுடன் கொண்டுள்ள பொதுத் தொடர்பில் வைத்துப் பரிசீலிக்கத் தொடங்கியதுமே, காரணமும் விளைவும் ஒன்றுக்குள் ஒன்று ஊடுவக் காண்கிறோம். பிரபஞ்ச அளவிலான செயலையும் எதிர்ச்செயலையும் நாம் கூர்ந்து நோக்குகையில் காரணம், விளைவு இரண்டும் ஒன்றோடொன்று இணைந்து கலக்கக் காண்கிறோம். [பிரபஞ்ச அளவிலான செயலிலும் எதிர்ச்செயலிலும்] இங்கே இப்போது விளைவாக இருப்பது, அங்கே அப்போது காரணமாக இருக்குமாறும், காரணமாக இருப்பது, விளைவாக இருக்குமாறும், காரணங்களும் விளைவுகளும் எப்போதும் தொடர்ந்து இடம் மாற்றிக் கொண்டே இருக்கின்றன.

இந்த நிகழ்வுப்போக்குகள், சிந்தனைப் பாங்குகள் எதுவும் இயக்க மறுப்பியல் சார்ந்த அறிவாய்வின் கட்டுக்கோப்பில் இடம்பெறுவதில்லை. இதற்கு மாறாக, இயக்கவியலானது, பொருள்களையும் அவற்றின் உருவகிப்புகளையும் (representations), அதாவது கருத்துகளையும், அவற்றின் அத்தியாவசியத் தொடர்பிலும், தொடரிணைப்பிலும், இயக்கத்திலும், தொடக்கத்திலும் முடிவிலும் உய்த்துணர்ந்து புரிந்து கொள்கிறது. எனவே, மேலே குறிப்பிட்டவை போன்ற அத்தகைய நிகழ்வுப்போக்குகள் செயல்முறைக்கான இயக்கவியலின் வழிமுறையைச் சரியென உறுதிப்படுத்தும் சான்றுகளாகி விடுகின்றன.

இயற்கைதான் இயக்கவியலுக்கான நிரூபணம். நவீன விஞ்ஞானத்தைப் பொறுத்தவரை, நாளுக்குநாள் மென்மேலும் அதிகரித்துவரும் மிக வளமான விவரப் பொருள்களைக் கொண்டு அது இந்த நிரூபணத்தை நிலைநாட்டியுள்ளது என்பதைச் சொல்லியாக வேண்டும். முடிவாகப் பார்க்குமிடத்து, இயற்கையானது இயக்கவியல் போக்கில் செயல்படுகிறதே அன்றி இயக்க மறுப்பியல் போக்கில் செயல்படவில்லை என்பதையும், முடிவில்லாமல் திரும்பத் திரும்பத் தொடங்கிய புள்ளிக்கே வந்துசேரும் சுழற்சியின் நித்தியமான ஒருமுகப் போக்கில் இயற்கை இயங்கவில்லை; மாறாக, அது மெய்யான, வரலாற்று ரீதியான பரிணாம வளர்ச்சிக்கு உள்ளாகிறது என்பதையும் நவீன விஞ்ஞானம் இவ்வாறு தெளிவுபடுத்தியுள்ளது. இது தொடர்பாக, ஏனையோர் அனைவருக்கும் முன்பாக டார்வின் (Darwin) பெயரைக் குறிப்பிட்டாக வேண்டும். அனைத்து அங்கக உயிரினங்களும், தாவரங்களும், விலங்குகளும், மனிதனும்கூட, கோடிக்கணக்கான ஆண்டுகளாக நடைபெற்று வரும் பரிணாம நிகழ்வுப்போக்கின் விளைவுகளே என்று நிரூபித்ததன் மூலம், இயற்கையைப் பற்றிய இயக்க மறுப்பியலான கருத்துருவுக்கு டார்வின் அதிவலுவான அடி கொடுத்தார். எனினும், இயக்கவியல் முறையில் சிந்திக்கக் கற்றுக் கொண்ட இயற்கைவாதிகள் மிகச் சிலரே. விரல்விட்டு எண்ணி விடலாம். விஞ்ஞானக் கண்டுபிடிப்பின் விளைவுகளுக்கும், [எவ்வித ஆதாரமுமின்றி, இப்படித்தான் இருக்க வேண்டும் எனத் தாங்களாக] முன்கூட்டியே வரையறுத்துக் கொண்ட சிந்தனைப் பாங்குகளுக்கும் இடையேயான இந்த மோதல்தான், தற்போது தத்துவார்த்த இயற்கை விஞ்ஞானத்தில் ஆட்சி செலுத்திவரும் முடிவற்ற குழப்பத்துக்குக் காரணமாகும். அதுதான் கற்பிக்கும் ஆசிரியர்கள், கற்றுக் கொள்பவர்கள், அவர்களைப் போன்றே நூலாசிரியர்கள், வாசகர்கள் ஆகியோரின் நம்பிக்கை இழப்புக்கும் காரணமாகும்.

எனவே, பிரபஞ்சம், அதன் பரிணாமம், மனிதகுலத்தின் வளர்ச்சி, இந்தப் பரிணாமம் மனிதர்களின் மனத்தில் ஏற்படுத்தும் பிரதிபலிப்பு ஆகியவற்றின் துல்லியமான உருவகிப்பை (representation) இயக்கவியல் வழிமுறைகளால் மட்டுமே பெற முடியும். வாழ்வு - மரணம், முற்போக்கான அல்லது பிற்போக்கான மாறுதல்கள் ஆகியவற்றின் எண்ணிலடங்காச் செயல்களையும் எதிர்ச்செயல்களையும் தொடர்ந்து தன் கவனத்தில் கொள்வதன் மூலம் இயக்கவியல் இதைச் சாத்தியம் ஆக்குகிறது. புதிய ஜெர்மன் தத்துவம் இந்த உத்வேகத்தில்தான் முன்னேறி வந்துள்ளது. சூரிய மண்டலம் நிலையானது, அது நித்திய காலத்துக்கும் நிலவுவது என்கிற நியூட்டனின் முடிபுகளுக்குத் தீர்வு கண்டதன் மூலம், கான்ட் (Kant) [தத்துவ இயலில்] தன் பணியைத் தொடங்கினார். பெயர்பெற்ற அந்தத் தொடக்கத் தூண்டுவிசை வரலாற்று நிகழ்வுப்போக்கில் ஒருதரம் அளிக்கப்பட்டதும், சூரியனும் அதன் அனைத்து கிரகங்களும் சுழலும் முகிற்படலப் பொருண்மையிலிருந்து (nebulous mass) உருவாயின என்பது கான்ட் தந்த தீர்வாகும். அதே வேளையில், சூரிய மண்டலம் இவ்வாறுதான் தோன்றியது என்ற இந்தக் கருத்திலிருந்தே, வருங்காலத்தில் அதன் அழிவும் தவிர்க்க முடியாது பின்தொடரும் என்கிற முடிவுக்கு அவர் வந்தடைந்தார். கான்டின் கொள்கை முடிவை, அரை நூற்றாண்டுக்குப் பிறகு, லாப்லாஸ் (Laplace) கணித வழியில் நிலைநாட்டினார். அதற்கும் அரை நூற்றாண்டுக்குப் பிறகு, வாயுவின் வெப்ப ஒளிவீசும் இத்தகைய பொருண்மைகள் (masses) உறைதலின் பல்வேறு நிலைகளில் அண்டவெளியில் நிலவுவதை நிறமாலை ஆய்வுக்கருவி (spectroscope) நிரூபித்தது.

இந்தப் புதிய ஜெர்மன் தத்துவம் ஹெகலியத் தத்துவ அமைப்பில் உச்சத்தைத் தொட்டது. இந்த அமைப்பில் இயற்கை உலகு, வரலாற்று உலகு, அறிவு உலகு ஆகிய அனைத்து உலகும், முதல்முறையாக, இடையறாத இயக்கம், மாற்றம், உருமாற்றம், வளர்ச்சி ஆகியவை கொண்ட ஒரு நிகழ்வுப்போக்காக உருவகிக்கப்பட்டது. இந்த அமைப்பின் பெருஞ்சிறப்பு இதில்தான் காணக் கிடக்கிறது. இந்த இயக்கம், வளர்ச்சி ஆகிய அனைத்தின் தொடர்ச்சியான ஒரு முழுமையை உருவாக்குகின்ற அகநிலைப் பிணைப்பைப் புலப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்த நோக்குநிலையிலிருந்து பார்க்கையில் மனிதகுலத்தின் வரலாறு என்பது, முதிர்ச்சிபெற்ற தத்துவார்த்தப் பகுத்தறிவின் தீர்ப்பாயத்தில் ஒருசேரக் கண்டிக்கத்தக்க, சாத்தியமான அளவுக்கு விரைவாக மறந்துவிடல் நல்லதெனக் கருதக்தக்க, அர்த்தமற்ற வன்முறைச் செயல்களின் மூர்க்கத்தனமான வெறியாட்டமாக இனிமேலும் தோன்றவில்லை. அதற்கு மாறாக, அதே மனிதனின் பரிணாம நிகழ்வுப்போக்காகவே தோன்றியது. இந்த நிகழ்வுப்போக்கின் படிப்படியான முன்னேற்றப் பயணத்தை, வளைந்து நெழிந்து செல்லும் அதன் வழிநெடுகப் பின்தொடர்வதும், தற்செயலானவையாகத் தோற்றமளிக்கும் அதன் அனைத்து நிகழ்வுகளின் ஊடாகவும் இழையோடும் உள்ளார்ந்த விதியைப் புலப்படுத்துவதுதான் இப்போது அறிவாளர்களின் பணியாக இருந்தது.

ஹெகலியன் தத்துவ அமைப்பு, தான் முன்வைத்த பிரச்சினைக்கு தீர்வு காணவில்லை என்பது இங்கு முக்கியமன்று. இந்தப் பிரச்சினையை முன்வைத்தது என்பதுதான் அதன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சிறப்பாகும். இந்தப் பிரச்சினை எந்தவொரு தனிநபராலும் எக்காலத்திலும் தீர்வுகாண இயலாத ஒன்றாகும். அவர் காலத்தில் ஹெகல் – சான்-சிமோனையும் சேர்த்து – அவருடைய காலகட்டத்தின் தலையாய கலைக்களஞ்சியச் சிந்தனையாளராகத் திகழ்ந்தார் என்ற போதிலும், அவர் வரம்புக்கு உட்பட்டவராகவே இருந்தார். காரணம், முதலாவதாக, தவிர்க்க முடியாதபடி அவர்தம் அறிவின் வீச்சு வரம்புக்கு உட்பட்டிருந்தது. இரண்டாவதாக, அவர் காலத்திய அறிவு, கருத்துரு இவற்றின் வீச்சும் ஆழமும் வரம்புக்கு உட்பட்டிருந்தன. இந்த வரம்புகளோடு மூன்றாவது ஒன்றையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஹெகல் ஒரு கருத்துமுதல்வாதியாக இருந்தார். அவருடைய மூளைக்குள் உதிக்கும் சிந்தனைகளை, உள்ளபடியான பொருள்கள், நிகழ்வுப்போக்குகள் ஆகியவற்றின் உத்தேசமான கருத்தியல் சித்திரங்களாக அவர் கருதவில்லை. ஆனால், அதற்கு மாறாக, பொருள்களும் அவற்றின் பரிணாமமும் உலகம் தோன்றுவதற்கு முன்பிருந்தே எங்கேயோ முடிவில்லா நித்தியத்திலிருந்து நிலவிவரும் ”கருத்தின்” (idea) மெய்மைப்படுத்தப்பட்ட சித்திரங்களே அன்றி வேறல்ல என்று கருதினார். இந்த முறையிலான சிந்தனை எல்லாவற்றையும் தலைகீழாகப் புரட்டிப் போட்டது. உலகிலுள்ள பொருள்களின் உள்ளபடியான தொடர்பினை முழுமையாக நேர்மாறாக்கியது. கண்கூடான உண்மைகளின் தொகுப்புகள் பலவற்றைப் பிழையின்றியும், அறிவுக் கூர்மையுடனும் ஹெகல் உள்வாங்கிக் கொண்டார். என்றாலும், மேற்கூறிய காரணங்களினால், [அவருடைய கருத்துகளில்] அரைகுறையான, செயற்கையான, இட்டுக்கட்டப்பட்ட, சுருங்கச் சொன்னால், விவர நோக்கில் தவறான கருத்துகள் நிறையவே இருந்தன. ஹெகலியத் தத்துவ அமைப்பே மாபெரும் குறைப்பிரசவமாகவே அமைந்தது. ஆனால், இத்தகைய தத்துவ அமைப்புகளுள் கடைசியானதாகவும் இருந்தது. உண்மையில் அது தீர்க்க முடியாத ஓர் உள்முரண்பாட்டில் சிக்கித் தவித்தது. ஒருபுறம், ஹெகலியத் தத்துவ அமைப்பின் தலையாய கருதுகோள், மனிதகுல வரலாறு என்பது ஒரு பரிணாம வளர்ச்சிப் போக்கு என்னும் கருத்துருவே ஆகும். [எனவே] முழுமுதல் உண்மை (absolute truth) என்று சொல்லப்படுகின்ற ஏதேனும் ஒன்றைக் கண்டுபிடிப்பதில் தன் அறிவாற்றலின் உச்சத்தைக் காண்பது, இத்தத்துவ அமைப்பின் இயல்புக்கே முரணானது ஆகும். ஆனால், மறுபுறம், இந்த முழுமுதல் உண்மையின் சாரமே தான்தான் என்பதாக ஹெகலியத் தத்துவ அமைப்பு உரிமை கொண்டாடியது. எல்லாவற்றையும் உள்ளடக்கிய, இயற்கை, வரலாறு பற்றிய அறிவாகிய ஒரு [தத்துவ] அமைப்பு, எல்லாக் காலத்துக்குமான இறுதி [உண்மை] என்று கூறுவது, இயக்கவியல் அறிவாய்வின் (dialectic reasoning) அடிப்படை விதிக்கே முரணானது ஆகும். புறத்தே நிலவும் பிரபஞ்சத்தைப் பற்றிய முறைப்படுத்தப்பட்ட அறிவு, காலத்துக்குக் காலம், பிரம்மாண்டப் பெருநடை போட்டு முன்னேறிச் செல்ல வல்லது என்னும் கருத்தை, உண்மையிலேயே இந்த அடிப்படை விதி தன்னுள் கொண்டுள்ளதே அன்றி, எவ்வகையிலும் அதை ஒதுக்கிவிடவில்லை.

ஜெர்மன் கருத்துமுதல்வாதத்தில் இருந்த இந்த அடிப்படை முரண்பாடு பற்றிய புரிதல், தவிர்க்க முடியாதபடி பொருள்முதல்வாதத்துக்குத் திரும்பவும் இட்டுச் சென்றது. [ஆனால்] வெறும் இயக்க மறுப்பியலான, 18-ஆம் நூற்றாண்டுக்கே உரிய எந்திரத்தனமான பொருள்முதல்வாதத்துக்கு அல்ல என்பதைக் கவனத்துடன் குறித்துக் கொள்க. [18-ஆம் நூற்றாண்டின்] பழைய பொருள்முதல்வாதம், முந்தைய வரலாறு அனைத்தையும், அறிவுக்கு ஒவ்வாத் தன்மையும் வன்முறையும் நிரைந்த தெளிவற்ற [கருத்து] குவியலாகப் பார்த்தது. [ஆனால்] நவீனப் பொருள்முதல்வாதம், இந்த வரலாற்றில் மனிதகுலத்தின் பரிணாம வளர்ச்சிப் போக்கைக் காண்கிறது. இவ்வளர்ச்சிப் போக்கின் விதிகளைக் கண்டறிவதையே தன் நோக்கமாகக் கொள்கிறது. 18-ஆம் நூற்றாண்டு ஃபிரெஞ்சுக்காரர்களைப் பொறுத்தவரை, ஏன் ஹெகலைப் பொறுத்தவரையும்கூட, இயற்கையிலிருந்து பெறப்பட்ட கருத்துரு என்னவெனில், ஒட்டுமொத்த இயற்கையும் நியூட்டன் கற்பித்ததுபோல் அதன் நித்தியமான விண்கோள்களையும், லின்னேயஸ் (Linnaeus) கற்பித்ததுபோல் மாற முடியாத அங்கக உயிரினங்களையும் கொண்டு குறுகிய வட்டங்களில் இயங்கி வருகிறது, என்றென்றும் மாறாமல் நிலையாக இருக்கிறது என்பதுதான். [ஆனால்] நவீனப் பொருள்முதல்வாதம் இயற்கை விஞ்ஞானத்தின் மிக அண்மைக்காலக் கண்டுபிடிப்புகளை உள்ளடக்கியுள்ளது. அக்கண்டுபிடிப்புகளின்படி, [1] இயற்கையும் கால அளவிலான அதன் வரலாற்றைக் கொண்டுள்ளது. விண்கோள்களும் அங்கக உயிரினங்களைப் போல, மக்களைப் போல, சாதகமான சூழ்நிலைகளில், [புதிதாக] பிறந்துகொண்டும், [இறந்து] அழிந்து கொண்டும் உள்ளன. [2] ஒட்டுமொத்த இயற்கை திரும்பத் திரும்ப நிகழும் சுழல்வட்டப் பாதையில் இயங்குவதாக இன்னமும் சொல்ல வேண்டியிருப்பினும், இந்தச் சுழல்கள் வரம்பிலாப் பெரும் பரிமாணங்களைப் பெற்றுவிடுகின்றன. இரண்டு கூறுகளிலும் நவீனப் பொருள்முதல்வாதம் சாராம்சத்தில் இயக்கவியல் தன்மை கொண்டதாகும். [தத்துவங்களின்] அரசியைப் போன்ற நிலையில் இருந்து கொண்டு, ஏனைய விஞ்ஞானங்களின் தொகுப்பு மீது ஆட்சி செலுத்துவதாகப் பாசாங்கு செய்யும், அந்த வகையானதொரு தத்துவத்தின் உதவி இனிமேலும் இதற்குத் தேவையில்லை. [அந்தந்தத் துறைசார்ந்த] ஒவ்வொரு தனிச்சிறப்பான விஞ்ஞானமும், பொருள்களின் மாபெரும் கூட்டுமொத்தத்திலும், பொருள்களைப் பற்றிய நம்முடைய அறிவின் கூட்டுமொத்தத்திலும் தனக்குள்ள நிலையினைத் தெளிவுபடுத்தக் கடமைப்பட்டவுடனே, இந்தக் கூட்டுமொத்தம் குறித்துக் பரிசீலிக்கும் ஒரு தனிச்சிறப்பான விஞ்ஞானம், தேவைப்படாத அல்லது அவசியமற்ற ஒன்றாகும். முந்தையத் தத்துவம் அனைத்திலும் அழியாமல் இன்னமும் எஞ்சியிருப்பது, சிந்தனையையும் அதன் விதிகளையும் பற்றிய விஞ்ஞானமாகிய முறைசார்ந்த தர்க்கவாதமும் (formal logic) இயக்கவியலும் (dialectics) மட்டுமே. ஏனைய அனைத்தும் இயற்கையையும் வரலாற்றையும் பற்றிய நேர்முக விஞ்ஞானத்தில் உட்கிரகிக்கப் பட்டுவிட்டன.

என்றாலும், தொடர்புடைய சாதகமான விவரப்பொருள்கள் ஆய்வுத்துறையால் வழங்கப்படும் அளவுக்கே, இயற்கை பற்றிய கருத்துருவில் புரட்சியை ஏற்படுத்த முடியும் என்றிருந்த நிலையில், ஏற்கெனவே மிகவும் முன்னதாகவே, கண்கூடான குறிப்பிட்ட சில வரலாற்று நிகழ்வுகள் நடைபெற்று, அவை வரலாறு பற்றிய கருத்துருவில் தீர்மானகரமான ஒரு மாற்றத்துக்கு இட்டுச் சென்றன. 1831-இல் முதலாவது தொழிலாளி வர்க்க எழுச்சி லியோனில் (Lyons) நிகழ்ந்தது. 1838-க்கும் 1842-க்கும் இடையே, தேசந் தழுவிய முதலாவது தொழிலாளி வர்க்க இயக்கமாகிய ஆங்கிலச் சாசனவாதிகளின் (English Chartists) இயக்கம் அதன் உச்சத்தைத் தொட்டது. ஐரோப்பாவில் மிகவும் முன்னேறிய நாடுகளின் வரலாற்றில், பாட்டாளி வர்க்கத்துக்கும் முதலாளித்துவ வர்க்கத்துக்கும் இடையேயான வர்க்கப் போராட்டம் முன்னணிக்கு வந்தது. ஒருபுறம், நவீன தொழில்துறையின் வளர்ச்சி, மறுபுறம், முதலாளித்துவ வர்க்கம் புதிதாகப் பெற்றுக் கொண்ட அரசியல் மேலாதிக்கம் இவற்றின் அளவுக்கேற்ப இது நிகழ்ந்தது. தொழிலாளி வர்க்கத்துக்கும் முதலாளித்துவ வர்க்கத்துக்கும் இடையிலான வர்க்கப் போராட்டம் முன்னணிக்கு வந்தது. மூலதனமும் உழைப்பும் ஒருமித்த நலன்கள் கொண்டவை என்றும், உலகளாவிய நல்லிணக்கமும், உலகளாவிய வாழ்க்கை வளமுமே கட்டுப்பாடற்ற போட்டியின் விளைவுகள் என்றும் கூறப்பட்ட முதலாளித்துவப் பொருளாதாரத்தின் போதனைகள் பொய் என்பதைக் கண்கூடான நிகழ்வுகள் மென்மேலும் வலுவாக நிரூபித்து வந்தன. இவற்றையெல்லாம் இனிமேலும் புறக்கணிக்க இயலாது. மிகவும் அரைகுறையானவை என்றாலும் இவற்றின் தத்துவார்த்த வெளிப்பாடாக அமைந்த ஃபிரெஞ்சு, ஆங்கில சோஷலிசத்தையும் இனிமேலும் புறக்கணிக்க இயலாது. ஆனால், வரலாறு பற்றிய பழைய கருத்துமுதல்வாதக் கருத்துரு இன்னமும் தூக்கி எறியப்படாமலே இருந்தது. இந்தக் கருத்துருவுக்குப் பொருளாதார நலன்களை அடிப்படையாகக் கொண்ட வர்க்கப் போராட்டங்கள் குறித்து எதுவும் தெரியாது. பொருளாதார நலன்கள் குறித்துமே எதுவும் தெரியாது. இந்தக் கருத்துருவைப் பொறுத்தவரை, உற்பத்தியும், [ஏனைய] அனைத்துப் பொருளாதார உறவுகளும் தற்செயலானவையாகவும், ”நாகரிகத்தின் வரலாற்றில்” கீழ்நிலைக் கூறுகளாகவுமே தோற்றமளிக்கின்றன.

கடந்தகால வரலாறு அனைத்தையும் ஒரு புதிய ஆய்வுக்கு உட்படுத்துவதை இந்தப் புதிய நிகழ்வுகள் கட்டாயமாக்கின. அதன்பிறகே கீழ்க்காணும் உண்மைகள் கண்டறியப்பட்டன: கடந்தகால வரலாறு அனைத்தும், அதன் புராதன கட்டங்களைத் தவிர்த்து, வர்க்கப் போராட்டங்களின் வரலாறாகவே இருந்துள்ளது; சமுதாயத்தின் இந்தப் போரிடும் வர்க்கங்கள் எப்போதுமே, உற்பத்தி முறைகள், பரிவர்த்தனை முறைகளின் படைப்புகளே; சுருங்கக் கூறின், அந்தந்தக் காலகட்டத்தில் நிலவும் பொருளாதார நிலைமைகளின் படைப்புகளே; சமுதாயத்தின் பொருளாதாரக் கட்டமைப்புதான் எப்போதுமே உண்மையான அடித்தளத்தை அமைக்கிறது; இதிலிருந்து தொடங்கினால் மட்டுமே, குறிப்பிட்ட வரலாற்றுக் காலகட்டத்தின் நீதி, அரசியல் சார்ந்த நிறுவனங்கள், அவற்றுடன் மதம், தத்துவம் சார்ந்த கருத்துகள், பிற கருத்துகள் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய [சமுதாயத்தின்] மேற்கட்டுமானம் முழுமைக்கும் நாம் முடிவான விளக்கம் காண முடியும். ஹெகல் வரலாற்றை இயக்க மறுப்பியலிலிருந்து விடுவித்தார்; அதனை இயக்கவியல் தன்மை கொண்டதாய் ஆக்கினார். ஆனால், வரலாறு பற்றிய ஹெகலின் கருத்துரு சாராம்சத்தில் கருத்துமுதல்வாத வகைப்பட்டது. ஆனால், கருத்துமுதல்வாதம் இப்போது அதன் கடைசிக் புகலிடமான வரலாறு பற்றிய தத்துவத்திலிருந்தும் விரட்டப்பட்டது. இப்போது வரலாறு பற்றிய ஒரு பொருள்முதல்வாத விளக்கம் முன்வைக்கப்பட்டது. இதுநாள்வரை செய்ததுபோல், மனிதனின் உணர்வைக் கொண்டு அவனுடைய இருப்பை விளக்குவதற்குப் பதிலாக, மனிதனின் இருப்பைக் கொண்டு அவனுடைய உணர்வை விளக்குவதற்கு ஒரு வழிமுறை கண்டறியப்பட்டது.

அக்காலம் முதற்கொண்டு, இனிமேலும் சோஷலிசம் என்பது ஏதோவொரு அறிவுசான்ற மூளையின் தற்செயலான கண்டுபிடிப்பில்லை. வரலாற்று ரீதியாக வளர்ச்சிபெற்ற இரு வர்க்கங்களான பாட்டாளி வர்க்கத்துக்கும் முதலாளி வர்க்கத்துக்கும் இடையே நிகழும் போராட்டத்தின் தவிர்க்க முடியாத விளைவு ஆகும். சாத்தியமான அளவுக்குக் குறைகளற்ற முழுநிறைவான ஒரு சமுதாய அமைப்பை உற்பத்தி செய்வது சோஷலிசத்தின் பணியாக இனியென்றும் இருக்கப் போவதில்லை; இந்த வர்க்கங்களும் அவற்றுக்கு இடையேயான பகைமையும் தவிர்க்க முடியாதவாறு உதித்தெழக் காரணமாக இருக்கும் நிகழ்வுகளின் வரலாற்று-பொருளாதாரத் தொடர்ச்சியை நுணுகி ஆய்வதும், இவ்வாறு தோற்றுவிக்கப்பட்ட பொருளாதார நிலைமைகளில் இந்த மோதலுக்கு முடிவு கட்டுவதற்கான சாதனங்களைக் கண்டறிவதும்தான் சோஷலிசத்தின் பணியாகும். ஆனால், இயற்கை பற்றிய ஃபிரெஞ்சுப் பொருள்முதல்வாதிகளின் கருத்துரு எந்த அளவுக்கு இயக்கவியலுக்கும் நவீன இயற்கை விஞ்ஞானத்துக்கும் முரண்பாடனதாக இருந்ததோ, அதே அளவுக்கு முந்தைய கால சோஷலிசம் இந்தப் பொருள்முதல்வாதக் கருத்துருவுக்கு முரண்பட்டதாக இருந்தது. முந்தைய கால சோஷலிசம் நடப்பிலுள்ள முதலாளித்துவ உற்பத்தி முறையையும் அதன் பின்விளைவுகளையும் கண்டித்தது உண்மைதான். ஆனால், அவற்றை [காரணம் கூறி] விளக்க, முந்தைய கால சோஷலிசத்தால் முடியவில்லை. எனவே, அவற்றைப் பற்றிய முழுமையான அறிவைப் பெற இயலவில்லை. அவற்றைத் தீயவை என நிராகரிக்க மட்டுமே அதனால் முடிந்தது. முதலாளித்துவத்தில் தவிர்க்க முடியாதபடி தொழிலாளி வர்க்கம் சுரண்டப்படுவதை, எந்த அளவுக்குக் கடுமையாக இந்த முந்தைய சோஷலிசம் வெளிப்படையாய்க் கண்டித்ததோ, அந்த அளவுக்குத் தெளிவாக, இந்தச் சுரண்டல் எதில் அடங்கியிருந்தது, அது எவ்வாறு தோன்றியது என்பதை அதனால் எடுத்துக்காட்ட முடியவில்லை. ஆனால், அவ்வாறு தெளிவாக எடுத்துக்காட்ட – (1) முதலாளித்துவ உற்பத்தி முறையை அதன் வரலாற்றுத் தொடர்பில் விளக்கி, ஒரு குறிப்பிட்ட வரலாற்றுக் காலகட்டத்தில் அது தவிர்க்க முடியாதது என்பதை எடுத்துரைப்பதும், கூடவே, அதன் காரணமாக நிகழும் தவிர்க்க முடியாத அதன் வீழ்ச்சியை எடுத்துரைப்பதும், (2) இதுநாள்வரை இரகசியமாக இருந்துவந்த, முதலாளித்துவத்தின் சாராம்சத் தன்மையைத் தோலுரித்துக் காட்டுவதும், அவசியமாக இருந்தது. உபரி மதிப்பு கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம் இது நிறைவேற்றப்பட்டது. ஊதியம் தரப்படாத உழைப்பை உறிஞ்சிக் கொள்வதுதான் முதலாளித்துவ உற்பத்தி முறைக்கும், அதன்கீழ் தொழிலாளி சுரண்டப்படுவதற்கும் அடிப்படையாக அமைகிறதென்று எடுத்துக்காட்டப்பட்டது. முதலாளி தம் தொழிலாளியின் உழைப்புச் சக்தியைச் சந்தையில் கிடைக்கும் பண்டமாக, அதற்கான முழு மதிப்பையும் [விலையாக] கொடுத்து வாங்கினாலும்கூட, அந்த உழைப்புச் சக்திக்காகத் தாம் கொடுத்ததற்கும் அதிகமான மதிப்பினை அதிலிருந்து பிழிந்தெடுத்துக் கொள்கிறார் என்பதும் எடுத்துக்காட்டப்பட்டது. மேலும், முடிவான பகுத்தாய்வில், உடைமை வர்க்கங்களின் கைகளில் தொடர்ந்து அதிகரித்துவரும் மூலதனத் திரட்சிக்கு ஆதாரமாகக் குவிக்கப்படும் அந்த மதிப்புத் தொகைகள், இந்த உபரி மதிப்பிலிருந்துதான் பெறப்படுகின்றன என்பதும் எடுத்துக்காட்டப்பட்டது. முதலாளித்துவ உற்பத்தியின் ஆதி மூலம், மூலதனத்தின உற்பத்தி ஆகிய இரண்டும் விளக்கியுரைக்கப்பட்டன.

வரலாறு பற்றிய பொருள்முதல்வாதக் கருத்துரு, உபரி மதிப்பு மூலமாக, முதலாளித்துவ முறையிலான உற்பத்தி பற்றிய இரகசியத்தின் வெளிப்பாடு ஆகிய இந்த மாபெரும் இரு கண்டுபிடிப்புகளுக்காக நாம் மார்க்சுக்குக் கடமைப்பட்டுள்ளோம். இந்தக் கண்டுபிடிப்புகளின் விளைவாக, சோஷலிசம் ஒரு விஞ்ஞானம் ஆகியது. அதன் விவரங்கள், உறவுகள் அனைத்தையும் வகுத்தமைப்பதுதான் அடுத்த பணியாக இருந்தது.

(அத்தியாயம்-2 முற்றும்)


அடிக்குறிப்பு

[அடிக்குறிப்பைப் படித்து முடித்தபின், அடிக்குறிப்பு எண்மீது சொடுக்கி, நூலின் உரைப்பகுதியை விட்ட இடத்திலிருந்து தொடர்ந்து படிக்கலாம்.]

[41] அலெக்சாண்டிரியா காலம் என்பது கி.மு. 3-ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 7-ஆம் நூற்றாண்டு வரை ஆகும். எகிப்திய நகரமான அலெக்சாண்டிரியாவின் பெயரில் இவ்வாறு அழைக்கப்படுகிறது. இக்கால கட்டத்தில் கணிதம், எந்திரவியல் (யூக்லிட், ஆர்க்கிமிடீஸ்), புவியியல், வானியல், உடலியல், உடற்கூறியல் போன்ற பல அறிவியல் துறைகள் வளர்ச்சி கண்டன.


அடுத்த பகுதி: அத்தியாயம்-3: [விஞ்ஞான சோஷலிசம்]

முந்தைய பகுதி: அத்தியாயம்-1: [கற்பனாவாத சோஷலிசம்]

கற்பனாவாத சோஷலிசமும் விஞ்ஞான சோஷலிசமும் - பொருளடக்கம்


வேறு மொழிகள் | தமிழ்ப் பகுதி | ஆங்கிலப் பகுதி